பக்கம் எண் :


இராவண காவியம் 343

   
      19.  தாளில் வீழ்ந்தழுந் தம்பி தனையெடுத்
          தாளி மொய்ம்பின ராற்றுவ ரோபிரிந்
          தேள னஞ்செய் தெனைக்குடி கேட்டரோ
          வேளை பார்த்து விரட்டின வோபகை.

      20.  உன்னை நீத்துயிர் விட்டன ரோதந்தை
          என்ன என்னையன் றுன்னைநீத் தேயுயிர்
          தன்னை விட்டனர் தந்தை யெனாமுனம்
          என்னை யாவென வேங்கி விழுந்தனன்.

      21.  எந்தை யேயென் றெழுந்துனைக் கொல்லவோ
          வந்து தோன்றினன் மாகொலை காரனான்
          தந்தை யேயுன்றன் சாதலைக் கண்டிலா
          மைந்த னோவிலை வன்பகை யென்றழும்.

      22.  நைகை மிக்கு நலிந்தழு வான்றனை
          உய்கை மிக்க உறவினர் ஆண்மகன்
          கைகை மிக்குக் கழிந்ததற் கேங்குதல்
          செய்கை மிக்கெனத் தேற்றிடத் தேறியே.

      23.  கேளு நட்புங் கெழுமப் பரதநீ
          ஆளு வாரற் றழுங்கு மயோத்தியை
          ஆளு தல்விட் டடைந்ததென் னீங்குநீ
          மீளு கென்ன மெலிந்த பரதனும்.

      24.  எனக்கு நாட்டுக்கு மென்ன தொடர்புகொல்
          நினக்குத் தானது நீள்கட னாகுமால்
          எனக்குத் தந்தைதந் தாரெனில் யானதை
          உனக்குத் தந்தனன் உற்றர சாள்கென்றான்.

      25.  வரிசை யாக மணக்கையி லுன்னைக்குப்
          பரிச மாகப் பரதநந் நாட்டினை
          அரச ரீந்தனர் ஆகையால் நீயதன்
          அரச னாகு முரிமையு ளாயென.
-------------------------------------------------------------------------------------------
      19. ஆளி - சிங்கம். மொய்ம்பு - வலி. உன்னை இகழ்ந்து என்னை கேட்டாரோ. 20. ‘உன்னைநீத்து உயிர் விட்டனரோ’ என்றது பரதன் மனத்தை அறிய. 22. கைகை - வெறுப்பு. செய்கை மிக்கு - மீறிய செய்கை.