11. அம்மு னிவனி ருக்கை யகன்றவர் செம்மை யின்றி யுயிர்கொன்று தின்றுமே இம்மை யின்ப மிதுவென வின்புரீஇ அம்ம லையை யகன்று வழிக்கொடு. 12. தண்ட மிழகந் தன்னை யடைதரக் கண்ட வாரியர் கண்கள் களிமடக் கொண்டு மேவர வேற்றுக் கொடுசெலீஇ உண்டு நன்புல வுள்ள மகிழ்ந்தனர். 13. ஆங்குச் சில்பக லன்ன ரிருந்துபின் நீங்கி யாயிடை நீடிய கானிடை ஓங்கு மென்பிடி யோடிரு மால்கரி பாங்கு செல்லுதல் போலப் படர்ந்தனர். 14. புனல்ம லிந்த புனத்திடைச் செல்கையிற் கனித மிழ்மகன் கண்டு முனிவர்க்கு மனைவி வேண்டுமோ மாது மொருத்தியே முனிவ ரென்றியான் மோசம்போ கேனெனா. 15. தடுக்க வந்தத் தறுதலை ராமனும் வெடுக்கென் றம்பை விடுத்துயிர் போக்கியவ் விடத்தை விட்டுப்பி னேகிச் சரபங்கன் இடத்தை யண்மி யினிதுண் டிருந்தனர். 16. சிலையி ராமனத் தீய சரபங்கன் நிலையி ருக்கவந் நீடிய கானுயிர் உலைய வேட்டவ ணுள்ள முனிவர்கள் சிலைவ லானிடஞ் சேர்ந்து திரளுற. 17. வாழ்க மாமனை யாளொடு மைந்தநீ சூழ்க நன்னலந் தோன்றிய வெம்பகை வீழ்க வெந்துய ரோடிகல் வென்றுமே வாழ்க வென்றவர் வாயுற வாழ்த்தியே. ------------------------------------------------------------------------------------------- 14. தவக்கோலத்தால் முனிவரென்று கொண்டான். இவன் விராதன் என்னும் அரக்கன் எனக் கூறப்படுபவன். 15. தறுதலை - கெட்டவன். | |
|
|