பக்கம் எண் :


348புலவர் குழந்தை

   
        26. துன்றி டாது துரத்துந் தமிழரை
           வென்று வேட்டிந்த விந்தநன் னாட்டிடை
           என்று நாங்க ளிருந்திடச் செய்வது
           வென்றி வில்லியுன் மேய கடனதாம்.

        27. இல்லை யேலினி யாங்க ளினியங்குச்
           செல்ல வேண்டிய தில்லைச் சிலைவலோய்
           புல்லி வாழப் புறப்பட லாரியம்
           நல்ல தேயென ராமன் வணங்கியே.

        28. எங்கு லப்பெரி யீரும தெண்ணம்போற்
           றங்கி வாழுந் தமிழ மறவரை
           உங்கு வேற்கர னோடழித் துங்களை
           இங்கு வாழ்ந்திடச் செய்குவ னென்றனன்.

        29. தனித்துத் தாமே தலைமையாய் வாழ்ந்ததை
           நினைத்து நீள்குடை நிங்கிமுன் போலவே
           தனித்து வாழுந் தகைநினைந் தேசில
           இனித்த மிழர்க ளெம்முற வாயினர்.

        30. அனையர் தம்மைவில் லாளிக ளாக்கியும்
           புனித மென்று புலவுகள் ளூட்டியும்
           இனிய ராயெம தேவல ராக்கியும்
           தனைய வாழ்வு தழைத்து வருகிறோம்.

        31. மலைமை மேயும் வளத்தமிழ் நாட்டிறை
           தலைமை யாட்சி தனைவெறுத் தேதனி
           நிலைமை வேட்கும் நெடுந்தமி ழர்பலர்
           சிலைமை காணிற் செருத்துணை யாகுவர்.

        32. மற்று நாங்கள் வளத்தமிழ் நாட்டுறை
           சிற்ற ரசர்கள் பி்ன்வரு சின்னரைக்
           கொற்றம் வேட்டதைக் கொள்ளற் கவாவுறுஞ்
           செற்ற முற்றிடச் செய்து வருகிறோம்.
------------------------------------------------------------------------------------------
        28. உங்கு - தங்கி வாழும். 30. தனைய என்றது - ராமனை. தன்ஐய. 31. சிலைமை - விற்றிறமை. செருத்துணை - படைத்துணை, நட்பு. 32. கொற்றம் - அரசு. செற்றம் - சினம்.