பக்கம் எண் :


இராவண காவியம் 349

   
        33.  கேட்டி யின்னுங் கிளர்பகை யைப்புறங்
            காட்டு தற்குவுள் நாட்டுக் கலகத்தை
            மூட்டு தற்கிணை முன்னி னிலைப்பிற
            நாட்டு கின்றனம் நாங்கள் நனியதை.

        34.  இன்னும் வேண்டுவ விப்பெருஞ் செய்கைக்கு
            முன்னி யாங்கள் முறைப்படி செய்குவம்
            அன்னை வேண்டுவ வன்னையே செய்குவம்
            தென்னர் நாடெலாஞ் சென்றுள வோர்குவம்.

        35.  மறமி குங்கரன் வல்லுயிர் கொள்வையேல்
            இறைவ னென்ன விலங்கையி லுள்ளனன்
            திறமை மிக்கவ ராயினுஞ் சேணுறல்
            அறம தன்றென ஆய்குவ ரல்லரோ.

        36.  கைவ லத்த கரனுயிர் கொள்வையேல்
            மைவ ளர்விந்தச் சாரலில் வாழ்குநர்
            உய்வ ருன்னடி உற்றனம் வாழ்வின
            செய்வ தோரவே சேர்ந்தனம் நெந்நலே.

        37.  தீங்கி லாது திரியு முயிர்களை
            வாங்கி யூனுணும் மாமறை வேள்வியைத்
            தீங்கென் பாரலாற் செந்தமி ழோர்தவந்
            தாங்கு வோரிடந் தாயினு மன்பரால்.

        38.  தாயி னுமவர் தாய்மொழிப் பற்றுளர்
            தாயி னோம்புவர் தாய்மொழி கற்பரைத்
            தூய செந்தமிழ் தோமறக் கற்றுயர்
            வாய நம்மவ ரந்தண ராயுளர்.

        39.  இன்னு நந்த மினத்த விளைஞரை
            மன்னி யீங்கு மறைவிடை வைத்தியாம்
            உன்னைச் சூழ்தர வூங்க ணமருவம்
            என்ன வன்ன ரிசைத்திட ராமனும்.

        40.  ஐயன் மீர்துணை யாவிரே லன்னரைப்
            பைய வென்று பகையின்றி நம்மவர்
            உய்ய வும்பெரி யோருயர் வேள்விகள்
            செய்ய வும்மடி யேனுமன் செய்குவன்.
-------------------------------------------------------------------------------------------
        36. உன் அடி உய்வர் - உனக்கடங்கி வாழ்வர். இன - அந்த ஏற்பாட்டை - நெந்நல் - நேற்று.