14. குரவை யாடிக் கொழும்புதர்க் கரவை யாடிமற் கைபிணைப் பரவை யாடிப் பகழிமூய் வரவை யாடி மகிழ்ந்தனர். 15. ஆடு வாரகன் றப்புறம் கூடு வாரொளி கோதையைத் தேடு வார்கையிற் சிக்கிடா தோடு வாருள் ளுவப்பரே. 16. பூவு வக்குவர் பூவரும் மாவு வக்குவர் மாவரும் பாவு வக்குவர் பாவரும் நாவு வக்குவர் நன்கரோ. 17. சிந்த மேகலைச் செம்மணி வந்து முந்த வளக்கரும் புந்தி மேலெழுந் தோடியே அந்தி லாங்குப்பந் தாடினர். 18. அருவி யாடி யருஞ்சுனை மருவி யாடி மணிக்கதிர் இருவி யாடி யிளங்கிளி ஒருவி யோட வுவப்பரே. 19. அன்ன வாறவ ராடியே நின்னல் நீத்து நெடுந்தொலை துன்னி யாங்கொரு சோலைவாய் இன்னு மாட விருக்கையில். 20. மாழை யுண்கண் மடந்தையும் தோழி மாரைத் துறந்துமே பூழில் வேங்கைப் பொதும்பரிற் பேழை முத்திற் பெயர்ந்தனள். ------------------------------------------------------------------------------------------- 14. கரவை ஆடி - மறைந்து விளையாடி. பரவை ஆடல் - கைபிணைந்து ஆடல். மல் - வலி. பகழி - அம்பு, கண். பகழி மூய் வரவை ஆடல் - கண்ணாமூச்சி யாடல். 16. மா - வண்டு. பா - பாட்டு. பாவரும் நா - நன்கு பாடுகின்ற நா. உவத்தல் - மகிழ்தல். 17. கரும்பு கை. உந்துதல் - உயர்தல். அந்தில் - அசை. 18. இருவி - தினைத்தாள்; இங்கே தினைப்புனம். ஒருவி - நீங்கி. 19. நின்னல் - இருப்பிடம். 20. மாழை - மான். பூழில் - அகில். பொதும்பர் - சோலை. | |
|
|