பக்கம் எண் :


358புலவர் குழந்தை

   
        35. மாதும் யானுமென் றம்பியும் தமிழகம் வந்தோம்
           ஏது செய்தனோ கண்டனன் நின்னையிவ் விடத்திற்
           கோதி லாதபூங் கொடியுன்மேற் காதலுங் கொண்டேன்
           பாது காவெனப் பாவையுஞ் சினந்துளம் பதறி.

        36. குன்றி யன்னவிக் கோலமுங் கொலைவிலுங் கொண்ட
           கொன்று ணும்புலைக் கொடுந்தொழில் வாழ்வுடைக் கொடியா
           நன்றி லாதவிப் பிறர்மனை நயக்குநின் னாட்டில்
           ஒன்றி வாழ்குநர் மக்களோ மாக்களோ வுரையாய்.

        37. பாவி நீயய லகம்புகுந் ததுமலாற் பழியும்
           மேவி னாய்தமிழ் மறவர்கள் கண்ணுறில் வீவாய்
           ஆவி யீந்தனன் ஓடிநீ யயோத்தியை யடைந்துன்
           தேவி யோடுவாழ் கென்றவ ணின்றுமே சென்றாள்.

        38. செல்லு முள்ளுவோ ருளமினித் திடுந்தமிழ்த் தேனை
           நில்லு நில்லுமென் றோடியே தடுத்தெதிர் நின்று
           வல்லி யேயுனை மருவிடா விடினுயிர் வாழேன்
           சொல்லு வாய்தமிழ் வாய்திறந் தெனப்பசுந் தோகை.

        39. காத லென்பதன் பொருளறி யாவிழி காமா
           மாதொ ருத்தியை வழிமறித் தடாதுசெய் வம்பா
           ஆத காதறி விலியிதோர் ஆண்மகற் கழகா
           போதி யென்றறைந் தாயிடை நின்றுமே போக.

        40. ஏக நான்விடேன் என்றவன் கைபிடித் திழுக்கத்
           தோகை மெய்நடு நடுங்கியின் னுயிர்துடி துடிப்பச்
           சாகு மாருயி ரினும்விடு தலைபெறத் தவித்துப்
           போக நீவிடு வாயெனத் திமிறவே பொல்லான்.

        41. இலையி லைமரு வாதுனை நான்விடே னென்ன
           வலிய வீர்க்கமா னுயிர்கொடுத் திழுத்தொளி வளைக்கை
           மெலிய விற்கையின் பிடிப்பினை யறவிடு வித்துப்
           புலியின் வாய்தவிர் மானெனப் பொருக்கெனப் போனாள்.

        42. பொருக்கென் றாங்கவள் பெயர்தலு மறிவிலாப் புல்லன்
           சுருக்கென் றெம்பியைக் குறுகியித் தொன்னிலம் புரப்பாள்
           இருக்கை நீத்ததோ செல்கிறா ளெம்பிநீ யவளை
           உருக்கு லைத்துவா என்னப் பாவியும் ஓடி.
-------------------------------------------------------------------------------------------
        36. குன்றி - குன்றிமணி. 41. ஈர்க்க - இழுக்க. வளைக்கை மெலிய.