பரிந்துரைகள் | வடமொழியில் இராமகாவியம் செய்த வான்மீகியும், தமிழ்க் கம்பரும், இராமனை நல்லவன் எனவும், இராவணனை இரக்கமென்றொரு பொருளிலாக் கொடிய அரக்கன்எனவும் வேண்டுமென்றே எழுதி வைத்தனர். கம்பரோ வடநாடுகளுள் ஒன்றன் மன்னன் மைந்தனான இராமனைக் கடவுளென நம்பி வணங்கும்படியும், தென்னாட்டின் மாபெருந் தலைவனும் தங்கள் முன்னோனுமான இராவணனைத் தமிழன் அல்லன்; எவனோ ஒரு கொடிய அரக்கன் என நம்பி வெறுக்கும்படியும் தமிழ் மக்களை மயக்கிவிட்டனர். தமிழ் மக்களின் அம்மயக்கவுணர்வைப் போக்கி உண்மையை யுணரும்படி செய்யும் பொருட்டே இராவண காவியம் தோன்றியது. இதன் விளக்கத்தை ழுஇராவண காவியம் எதற்கு?ழு என்ற அடுத்த கட்டுரையிற் காண்க. தமிழ் மக்களின் இழிவு நீக்கப் போந்த இராவண காவியம் என்னும் இத் தனித்தமிழ் இலக்கியக் குழந்தை, 1946இல் பிறந்து வளர்ந்து ஈராட்டைப் பருவத்தை அடைந்து, ஓடியாடி விளையாடி, மழலையுரையாடித் தமிழ்மக்களை மகிழ்வித்து வந்தது. அது கண்டு மனம் பொறாத ஒரு சிலரின் தூண்டுதலினால், தமிழகத்தின் அன்றைய ஆட்சியாளர், 2-6-1948இல் அக் குழந்தையைத் தமிழரிடைச் செல்லாமல் தடை என்னும் சிறையிலிட்டனர். தமிழகத்தில் தனித்தமிழர் ஆட்சி ஏற்பட்டதனால், அத்தமிழக அரசினால், தமிழ்வாழ, தமிழினம் வாழத் தாம் வாழும் தமிழக முதல்வர் டாக்டர், கலைஞர் கருணாநிதி அவர்களால் 17-5-1971இல் விடுதலை செய்யப்பெற்று, 23 ஆண்டுகள் சிறையிலடைபட்டுக் கிடந்த அச்செந்தமிழ்க் காவியச் செல்வி பழையபடி புதிய எழிலோடும் பொலிவோடும் (புதிதாக 272 செய்யுட்கள் செய்யப்பட்டு ஆங்காங்கே சேர்க்கப்பட்டுள்ளன. முன் 2828 செய்யுட்களாக இருந்தது. இப்போது 3100 செய்யுட்களாக வளம் பெற்றுள்ளது.) உங்களை மகிழ்விக்க வருகிறாள். அவளை அன்புடன் வரவேற்றுப் போற்றுதல் தமிழ் மக்களாகிய உங்களின் நீங்காக் கடமையாகும். | |
|
|