பக்கம் எண் :


360புலவர் குழந்தை

   
        50. ஐயை யோவென முகத்தினி லறைந்துகொண் டழுது
           கையை யோவென அவிழ்த்துமென் மலர்க்கையின் கட்டை
           வையை யோவென வைத்தவ ரொருத்தியின் மடிமேல்
           நையை யோவெனக் கதறியே யழுதுளம் நைவார்.

        51. ஏங்கு வார்தம திறைவியை மலர்க்கையா லெடுத்துத்
           தாங்கு வாரழு வார்விழு வாருளந் தளர்வார்
           தீங்கு செய்தவப் பாவிகள் தொலைகெனச் சினப்பர்
           பாங்கி லேமுனை நீங்கினே மெனப்பதை பதைப்பர்.
 
கொச்சகம்
 
        52. ஐயோ பழியேங்கள் அன்னாய் தனிவிடுத்தே
           செய்யா தனசெய்தேம் தீயேம் சிறுமதியேம்
           உய்யே மினியாம் உறுப்பிலியாய் நீயுள்ளம்
           நையா யெனச்சொலவோ நாங்கள் தமிழ்கற்றோம்.

        53. யாரோ வொருத்தி யனையோடு நாஞ்செல்வோம்
           வாரீ ரெனவே வாய்பேசி னீரில்லை
           காரோதி சோரி கலந்து பொடியாடிப்
           போராளி கைபோலப் புல்லென்று தோன்றுதனாய்.

        54. அன்றிந்த வாரியரே அன்னை தனைத்தனியே
           கொன்றோடிப் போனாரே கொடும்பாவி பிள்ளைகளே
           இன்று நமக்கிவ் விடர்செய்த தீயோரை
           வென்று கருவறுக்க வீரரே வாரீரோ.

        55. காரிகையீ ரெள்ளின் கமழ்பூங் குமிழெங்கே
           நேரிழையீர் வள்ளை நிழலா டிலையெங்கே
           ஈரிதழீ ரன்னை யிணைக்கோங் கரும்பெங்கே
           ஆரியப்பூண் டின்றோ டழிந்தொழிந்து போகாதோ.

        56. புள்ளிமிருந் தாமரையும் பூங்குவளை யேமுதலா
           உள்ள மலரு மொளிர்செந் தளிரிருக்க
           எள்ளி னிளம்பூவோ டிணைக்கயல்சென் றேபொருதும்
           வள்ளையொடு கோங்கரும்பை மாபாவி கொய்தானே.
-------------------------------------------------------------------------------------------
        50. நையையோ - நைகின்றாயோ. 52. காரோதி - கருங்குழல். பொடி - புழுதி. 55. எள்ளின்பூ, குமிழ்பூ - மூக்கு வள்ளை - ஒரு கொடி. நிழலாடு இலை - தளிர் - காது. 56. புள் - வண்டு இமிர்தல் - ஒலித்தல். தாமரை குவளை முதலியன - கை, கண் முதலியன. செந்தளிர். மாந்தளிர், ஆலந்தளிர், அசோகந்தளிர் - முறையே மேனி, வயிறு, அடி.