பக்கம் எண் :


இராவண காவியம் 361

   
       57.  பெண்ணொருத்தி பெற்றெடுத்த பிள்ளைகளோ வன்றியவர்
           மண்ணி லிருந்துவெளி வந்தமா பாவிகளோ
           பெண்ணினொடு கூடப் பிறந்தனரோ கல்லுடனோ
           பெண்ணைமணந் தாரோ பிறிதோ வறியேமே.

       58.  பெற்ற கொடும்பாவீ பெண்கொலைசெய் பாவிதனைப்
           பெற்ற பெருவயிற்றைப் பீறிச் சிதைத்திடுவாய்
           மற்றுநீ பெண்ணன்றோ மானங்காத் தேமாள்வாய்
           அற்றே லுலகளவு மவதூறு நீங்காதே.

       59.  நினையொன்று கேட்கின்றேம் நின்போன்ற வோர்பெண்ணின்
           சினைகொன் றுயிர்கொல்லாச் சென்ற கொடும்பாவி
           மனையென்று பேர்சொல்ல மான முனைக்கிலையோ
           உனையென்றோ வோர்நா ளுருக்குலைப்பான் றப்பாதே.

       60.  எம்மை யுருக்குலைத்தே யிந்நிலைக்கா ளாக்கியவச்
           செம்மையொன் றில்லாத தீயவனன் னாட்டுறையும்
           அம்மையீ ரக்கைமீ ராமா ரியப்பெண்காள்
           உம்மையுமப் பாவி யுருக்குலைக்க வஞ்சுவனோ.

       61.  உங்கள் கணவர்களா லொன்றாவப் பாவிதனை
           நங்கைமீ ருங்களது நாட்டைவிட் டோட்டிடுங்கள்
           அங்கவர் செய்யாரே லன்னைமீ ரெல்லீரும்
           வங்கக் கடல்வீழ்ந்து மாண்டு மடிவீரே.

       62.  ஆரியப் பெண்ணுலகே யரசனென் றஞ்சாதப்
           பூரியன்பாற் சென்றே புலைமகனே யெங்களிலோர்
           காரிகையை வெட்கமின்றிக் காணாச் சினைசிதைத்தல்
           சீரியதோ வென்றே திடங்கொண்டு கேட்பீரே.

       63.  நன்கலமென் றேபுலவர் நாப்பயிலும் பெண்ணுலகை
           வன்கொலைசெய் புல்லா மடையா கொடுங்கோலா
           புன்கொலைஞா வுன்னைப் பொலந்தொடியாள் கண்காண
           வன்கொலைசெய் கில்லேமேல் வண்டமிழ்ப்பெண் டீரலமே.

       64.  படைதரியா தேதனித்த பைந்தொடியை வன்கொலைசெய்
           நடைபிணமே கண்ணமையா நாணிலியே செந்தமி்ழ்ப்பெண்
           படையெதிரே வந்துன் படைவலியைக் காட்டுவையேல்
           தொடியணிந்தே பேடீ துரத்தி யடிப்பேமே.
-------------------------------------------------------------------------------------------
       61. வங்கம் - கப்பல். 64. கண் - இரக்கம்.