4. குறையவட் கென்ன வென்னக் கொடுங்குறை யெனவென் னென்ன இறைவியை யெனவென் னென்ன வென்னெப்போ மெனவென் னென்ன மறையவ ரடிமை யென்ன வடவரோ வுரைமி னென்னக் குறைமதி யுடையோ ரென்னக் கொல்லெனக் கொலையென் றாரே. 5. கொலையென வுரையா முன்னங் கோளரி யென்னச் சீறி மலையெனப் பெருத்த தோளான் வாய்கடித் துருமி னார்த்து நிலையிழிந் தியன்று பல்லை நெருநெரென் றுறக்க டித்துக் கலைநெளிந் துயிர்ப்பு வீங்கிக் கைபிசைந் திருந்தெ ழுந்தே. 6. உற்றதை யுரைமி னென்ன வுள்ளவா றவருஞ் சொல்லக் கொற்றவேற் றானை மன்னா குடைமதிப் பொலிந்த தங்காய் அற்றதோ வுறவின் றோடே யாக்கைமண் கொளவீந் தீரோ மற்றது கேட்ட பின்னும் மாள்கிலேன் கொடியே னென்னும். 7. புறங்கொடா மறவீர் நீரும் பொருகளம் புகுந்து நூறி மறங்கொடா தொருங்கெல் லோரும் வஞ்சவா ரியர்களான அறங்கொடாக் கொடியர் தம்மா லவிந்தொழிந் ததுகேட் டின்னும் உறங்கிடா துயிர்காத் துள்ளே னோகொடும் பாவி யென்னும். 8. இனத்தவர்க் கிரங்கி டாம லிரண்டகஞ் செய்து பாழும் புனத்திடை யொளிந்து வாழும் பூரியர்க் கடிமை யாகி மனத்திடை மான மின்றி மண்ணிடை யினத்தை வீழ்த்தித் தனித்துவாழ் கின்ற நீருந் தமிழரோ அல்லீ ரென்னும். 9. மாந்தளிர் மேனி வாட மண்ணிடைப் புரண்டு ருண்டு பூந்தொடை பொலியச் சூடிப் புள்ளினந் தமிழ்ப்பண் பாடும் கூந்தலைப் பிடித்தப் பாவி கொடுமைசெய் திட்ட போது காந்துவே லண்ணா வென்று கதறிநீ யழுதிட் டாயோ. 10. புனைப்படை சூழச் சென்று பொருகளக் கடலை நீந்தி இணைப்படைக் கரையை நண்ணி யேதிலர் சிலையிற் றொட்ட கணைப்பட மறவ ரெல்லாங் களத்தவிந் திட்ட போது துணைப்படை கண்டி லாது துன்பமுற் றழுங்கி னாயோ. ------------------------------------------------------------------------------------------- 5. இழிந்து இயன்று - இறங்கி நடந்து. கலை - உடல். 9. காந்துதல் - ஒளிர்தல். 10. இணைப்படை - ஒத்தபடை அழுங்குதல் - வருந்துதல். | |
|
|