11. குமிழ்மலர் கொய்த போதுங் குழையினை யறுத்த போதும் உமிழ்சுடர்க் குருதி யந்நின் றூற்றெடுத் திழிந்த போதும் இமிழ்சுரும் பணையைத் தீயோ னிழிகையாற் றொட்ட போதும் தமிழ்மணங் கமழுஞ் செவ்வாய் தான்றிறந் தழுதிட் டாயோ. 12. வீரர்க ளவிந்த போதும் வெறுங்களங் கண்ட போதும் தேரினைச் சிதைத்த போதுஞ் செங்கைவே லறுத்த போதும் சீரிலா னிகழ்ந்து நம்மைச் சிறியசொற் சொன்ன போதும் கூரிவேற் கையா வுள்ளங் கொதித்தெனை நினைத்திட் டாயோ. 13. தங்கையென் றழையா முன்னந் தமிழ்மணங் கமழும் வாயால் இங்குளே னண்ணா வென்னென் றேவலிற் றிறம்பா நின்ற மங்கையர்க் கரசி யந்தோ மண்ணினுக் கிரையா னாயே எங்குனைத் தங்கா யென்பே னென்றெனை யண்ணா வென்பாய். 14. சென்றெறி முரசி னோசை செவிப்படா முன்னம் புக்கே ஒன்றலர் தமையொள் வேலா லோரிநாய்க் கிரையாத் தந்து வென்றிகொண் டேன்மாறில்லை வேறென வேவல் கேட்போய் என்றெனை யேவல் கேட்பாய் என்றுநா னேவப் போறேன். 15. மங்கையர் வந்தா ரில்லை மறவர்மு னின்றா ரில்லை எங்கைமீ ரென்ற போழ்தத் திறைவியே னென்றா ளில்லைச் செங்கைவேல் தந்தா ரில்லைத் தீயவ ரெம்மோ ரென்றே எங்கையே யெம்பி யேநீ ரெங்களை மறந்திட் டீரோ. 16. குற்றமே யுருவ மான குணமிலாக் கொடியோன் கூந்தல் பற்றியே யிழுத்துத் தள்ளிப் பண்பொடு மணந்து வாழ்க்கை உற்றவ னன்றிக் காணா வுறுப்பினை யறுத்த போது பொற்றொடீ யெவ்வா றேங்கிப் புலம்பிநீ துடித்திட் டாயோ. 17. செருக்களத் தொருவ னாகிச் செங்கைவேற் படையின் றாகி நெருக்கென வெறுங்கை யோடு நிற்கவீ விரக்க மில்லான் வெருக்கெனக் கழுத்தை யீர வெங்கணை யதனை யந்தோ பொருக்கென விடக்கண் டுள்ளம் புகைந்துநொந் தினைந்திட் டாயோ. 18. தகையிலா னுதைத்துக் கீழே தள்ளிவா ளுருவி யெட்பூம் பகையினை யிளநீள் வள்ளைப் பாசிலை தன்னைக் கோங்க முகையினை யறுத்த போது முருக்கிதழ் திறந்தா வென்றெவ் வகையுடல் பதைப தைத்தே மனந்துடி துடித்திட் டாயோ. ------------------------------------------------------------------------------------------- 11. இமிழ்தல் - ஒலித்தல். சுரும்பணை - கூந்தல். 17. நெருக்கென - திடத்துடன். | |
|
|