19. அடங்கவே படைக ளெல்லா மழிந்துமே தனிய னாகி நெடுங்கள நிற்கக் கண்டந் நெறியிலான் கடிதி னெய்த கடுங்கணை சுருக்கென் றுன்றன் கழுத்தினிற் பட்ட போது நடுங்கியைம் புலனுஞ் சோம்பி நலிந்துமெய் மறந்திட் டாயோ. 20. முன்னொரு காலை யானு முறைசெய்வான் சென்ற போது தன்னிகர் விந்த நாட்டித் தறுதலை தந்தை தன்னை வெந்நிடத் துரத்தி னேனவ் விறலிலான் மகாரை யேவி என்னருந் துணையீ ருங்கட் கிறுதிசூழ்ந் திட்டான் போலும். 21. கொல்லியே யுயிரை யூனுண் கொடியவர் நேர்மை யில்லாப் புல்லியர் வஞ்ச நெஞ்சர் பொருந்தியே யிருந்து வாழும் அல்லிலை நெடுவே லேயவ் வாரிய மென்னும் பேரை இல்லையென் றாக்கிடாயே லினியுனைத் தொடாதென் கையே. | கொச்சகம் | 22. எந்தைக் கொருபெண் ணெளியார்க் கியல்கைத்தாய் செந்தமிழின் செல்வி திருவறத்தின் பூஞ்சேக்கை வந்தெனக்குப் பின்பிறந்த மாறா வுடன்பிறப்பி எந்தநா ளம்மா வெதிர்கண் டுவப்பேனோ. 23. தானைத் தலைவா தமிழ்கற் றுணர்ந்தோனே வானைப் புறங்கண்ட வள்ளல்வளச் செங்கரனே ஊனைத்தின் றூனைப் பெருக்கு முதவாரைக் கானத்தே போக்கவிரு கண்கொண்டு பார்ப்பேனோ. 24. பொன்னஞ் சிலம்பு புலம்பப் புனமயில்போற் பின்னற் புறமசையப் பெண்மயிலார் பின்றொடர அன்ன நடைநடந்தென் னண்ணாவென் றென்முன்வர என்னிருகண் கண்டே யினிக்களித்தல் கூடுங்கொல். 25. கேள்வாய்ச்சொல் மாறாக் கெழுதகையோய் கேளல்லார் நாள்வாய்ப்பத் தாளா நனிவெஞ் சினமறவா ஆள்வீச்சுக் காயிரம்பல் லாயிரமண் ணாகிடச்செய் வாள்வீச்சைக் கண்டு மகிழ்வதூஉங் கூடு்ங்கொல். ------------------------------------------------------------------------------------------- 20. வெந் - முதுகு. மகார் - மக்கள். 22. சேக்கை - படுக்கை. 25. கேள் - தம்மவர். வாய்ப்ப - இருக்க. | |
|
|