26. கைதட்டிப் போயொளிந்து கண்கட்டிக் கொண்டொருவர் மெய்தொட்டுக் கொண்டுவிளை யாடி யோடுகையில் நெய்தொட்ட கூந்தல் நிழலை யராவென்றே வெய்திட் டதைநினைக்க வேகின்ற தென்னுளமே. 27. பொன்னங் கழலதிரப் போய்வாள் முனைவீழா முன்னங்கை தாங்கி முடுகிப் படிவீழ்ந்த சின்னஞ் சிறுகாலைச் செய்த செயலைநினைத் தென்னெஞ் சுருகி யெரிவாய் மெழுகாமே. 28. பண்ணைப் பழித்தவிசைப் பாட்டென்று கேட்பேனோ கண்ணைக் கவராட்டங் காண்பேனோ கைசெய்யும் வண்ணத் தனியாழ் மழலைமொழி கேட்பேனோ எண்ணத் தொலையா விடர்க்கடலுள் வீழ்த்தினையே. 29. போர்தாங்கி யொன்னலர்கள் போந்தாற் பொருக்கென்று நீர்தாங்கிப் பின்வாங்கா நிற்குநெடுங் கல்லணைபோல் தார்தாங்கி வாகை தரிக்குந் திறன்மறவா பேர்தாங்கித் துன்பம் பெருகியழ விட்டனையே. 30. உண்ணா வமிழ்தே யொளிர்செவ்வேற் செங்கரனே நண்ணார் கொடுங்கணையால் நைந்தே நலிவெய்திப் புண்ணாய்ப் புழுங்கிப் பொலிவற்ற பேருடலைக் கண்ணாரக் காணாக் கடையேன் கொடியேனே. 31. இவ்வா றரற்றி யிருக்கு மெழுந்திருக்கும் எவ்வா றினியா னிருப்பேன் பிரிந்தென்னும் ஒவ்வா தனசெய்த வோகொடிய வாரியரைச் செவ்வேற் கிரையாக்கித் தீருவே னென்றார்க்கும். | கலி விருத்தம் | 32. தங்கையொடு தானைத் தலைவனுயிர் கொன்ற அங்குணமி லாதவட வாரியரை நாளை செங்கைவடி வேலினுயிர் தீர்க்கிலனே யாகிற் பொங்கெரியின் மூழ்கியுயிர் போக்குவனா னென்றான். ------------------------------------------------------------------------------------------- 26. அரா - பாம்பு. வெய்திடல் - அஞ்சல். 27. வாள் நாட்டித் தாண்டி விளையாடும் போது வாள் முனையில் வீழாமல் கைதாங்கி, அவ்வதிர்ச்சியால் நிலத்தில் வீழ்ந்தா னென்க. 29. தார் - தூசிப் படை பேர் - புகழ். 32. அம் - நல்ல. நாளை - பின்னர். பொங்கு - மிக்க. | |
|
|