பக்கம் எண் :


372புலவர் குழந்தை

   
        33. தன்கொலை புரிந்தெமது தங்கையுயிர் வீய
           வன்கொலை புரிந்தவனை வாட்கிரை கொடேனேல்
           நன்கல மெனப்பெரிது நம்பியடை வைத்த
           பொன்கல முணுங்கொடிய பூரியனு மாவேன்.

        34. தேரினை யுடைத்தயில் செகுத்துயிர் குடித்த
           பூரியனை வேலினுயிர் போக்கவரி யேனேல்
           ஊரினை விடுத்துரிய ரோம்புகை விடுத்தே
           ஆரியர் தமக்கடிமை யானவனு மாவேன்.

        35. என்றாயை யென்னுட னெழுந்தவிள மானை
           மென்றாரை சோரிபட மென்சினை சிதைத்தே
           கொன்றாரை வேலினுயிர் கோறல்புரி யேனேல்
           மன்றோரஞ் சொன்னகொடு வஞ்சகனு மாவேன்.

        36. கற்றபடை யற்றுவெறுங் கையொடுநின் றானைக்
           சிற்றறிவி னாலுயிர் செகுத்தவனை நாளை
           வெற்றிவடி வேலினுயிர் வேறல்புரி யேனேல்
           நற்றமிழர் பாடுதலில் நாடுடைய னாவேன்.

        37. பொடிபடிய மாந்தளிர் புரண்டிட நிலத்தே
           கொடியனைய தங்கையுயிர் கொன்றவனை நாளை
           வடிவுடைய வேலினுயிர் மாய்த்திலனே யாகிற்
           குடிகள்பழி தூற்றுகொடுங் கோலினனு மாவேன்.

        38. மறங்கடைய செங்கரன் வறுங்கையுடைய யானை
           அறங்கடைய னாய்த்தலை யறுத்தவனை நாளை
           குறங்கிடை விலங்கடையக் கோறல்புரி யேனேல்
           புறங்கடை நயந்துசெலும் பூரியனு மாவேன்.

        39. உமிழ்குருதி யோடவெ னுடன்பிறவி தன்னைக்
           குமிழினொடு வள்ளைமுகை கொய்தகொடி யோரை
           இமிழ்கழுகு நாய்நரிகட் கீகைபுரி யேனேல்
           தமிழ்மொழி கலாதசிறு தாயகனு மாவேன்.

        40. தனித்தமிழ் மறப்படை தனைத்தமிழ் நிலத்தார்க்
           கனைப்படு படைத்தலைவ னைக்கொல்கொடி யோரை
           நுனைப்படுசெவ் வேலினுயிர் நூறியொழி யேனேல்
           இனத்தவர் தமைப்பழி யிரண்டகனு மாவேன்.
-------------------------------------------------------------------------------------------
        33. தன் கொலை - தற்கொலை. அடை - அடைக்கலம். 35. சோரி மென் தாரை பட. தாரை - ஒழுங்கு 38. அறங்கடை - தீமை. குறங்கு - தொடை. புறங்கடை - அயல் மனைக்கண். 39. உமிழ்தல் - ஒழுகுதல். இமிழ் - ஒலி. 40. நுனை - முனை. நூறி - கொன்று.