பக்கம் எண் :


இராவண காவியம் 379

   
       38.   என்றின் னனபலவா றேங்கி யிரங்கிமனம்
            கன்றிக் கதறிக் கலன்கழற்றிச் செய்குறிசெய்
            தொன்றுந் துணியா துணர்வற் றவள்சென்றாள்
            சென்று சிலபகலிற் றென்னிலங்கை சேர்ந்ததுதேர்.

       39.   சேர்ந்து மணிமுன்றிற் றேர்நிறுத்தி யுட்செலவே
            ஏந்திழையார் சீதைதனை ஈப்போல மொய்த்தார்கள்
            வேய்ந்தனிரோ வாகையென வெள்வேலான் தேர்கடவிப்
            போந்ததுவுஞ் செய்ததுவும் புக்கதுவுங் கூறினனால்.

       40.   ஆய்மொழியு மோவென் றழுது மனக்கொண்ட
            காய்மொழியை நீத்துக் கதிர்வேலோய் உங்கள்தமிழ்த்
            தாய்மொழிமே லாணை தமியே னிரந்து சொல்லும்
            வாய்மொழியைக் கேட்டென் மானங்காத் தோம்புதிரே.

       41.   புக்க விருந்தினரைப் பொன்போலப் போற்றுதமிழ்
            மக்கள் பிறப்புரிமை வாய்ந்தகலா வின்பநலந்
            துய்க்க வுதவுதமிழ்த் தூயோய்நும் பேருக்குத்
            தக்க படியுரிமை தந்தெம்மைக் காப்பீரே.
 
எழுசீர் விருத்தம்
 
       42.   மன்னவர் மன்னா வென்னருங் கணவன்
                 மனையிலா வேளைபார்த் திருந்து
            துன்னியு மவராற் றனித்திருந் தேனைத்
                 தூக்கியேன் தேரில்வைத் தடைந்தீர்
            என்னயான் செய்தே னிதுதமிழ் முறையோ
                 எளியனே னுய்வழி யுண்டோ
            இன்னலுற் றெனது கணவனின் பிரிவா
                 லிறப்பது தங்களுக் கியைபோ.

       43.   எளியனேன் செய்த பிழையெதோ வறியேன்
                 இருக்கினு மப்பிழை பொறுத்தென்
            உளமலி காதற் கணவனை யடியாள்
                 உற்றிடச் செய்குவீ ராயின்
            அளிமுர லலங்கல் துயல்வரு தோளா
                 அருந்தமி ழகத்தைவிட் டகன்றே
            வளநக ரயோத்தி செல்குவோ மிதனை
                 மறக்குத லிறப்பினு மிலமே.
-------------------------------------------------------------------------------------------
       41. பேர் இராவணன் - பேருரிமை யுடையவன். 43. அளிவண்டு. முரலுதல் - ஒலித்தல்.