48. கொலைஞனைக் கூடி யிருப்பதிற் பிரிந்து குயின்மொழி யாரொடு கூடிப் புலையினை விண்டு புனிதவூ ணுண்டு பூவையென் னொடுவரு தங்கை நிலையினி லிருந்து வாழ்குவை யவனை நினைப்பதுங் குற்றமற் றவனைத் தொலையென வயோத்தி துரத்துவே னென்னத் தோகைபின் னின்னன சொல்வாள். 49. கல்லதே யெனினுங் கடிமணம் புரியிற் கணவனே பெண்களுக் கென்று சொல்லுவ ரறநூல் பளகற வுணர்ந்த தூயவ ராகையா லைய தொல்லுல கதனிற் கணவனைப் பிரிந்து தோகையான் றனித்துமே வியங்குங் கல்லினைப் போலக் கழிக்குவ தல்லாற் கண்டபெண் பிறவியின் பயனென். 50. தெரிவதற் குரிய பகுத்தறி வில்லாச் சிறியவர் செய்பிழை யதனைப் பெரியவர் பொறுத்தல் கடனெனப் பெரியோர் பேசுவர் பிழையறத் தமிழின் அரியபல் கலையுங் கற்றறிந் துயர்ந்தோய் அயலவ ரறிவிலர் சிறியர் பரியுதற் குரியர் செய்பிழை பொறுத்திப் பாவியைக் காப்பதுன் கடனே. 51. என்றவள் வேண்டத் தமிழ்முழு துணர்ந்த இராவணன் பெண்மணீ யினையேல் கொன்றுமே தொலைப்பே னுன்றனுக் காகக் கோறலைத் தவிர்த்தனக் கொடியோர் உன்றனைத் தேடிக் கொண்டிவ ணடையின் உயர்தமிழ்ப் பெண்கள்முன் னிலையில் பொன்றினு மறவா வியன்றநல் லறிவு புகட்டியே போக்குவன் புகாரேல், | |
|
|