பக்கம் எண் :


இராவண காவியம் 383

   
       56. அன்புட னருளுக் கிருப்பிட மான
               வருந்தமி ழகம்பிற வாதே
          வன்புலை மலிந்த வாரிய நாட்டில்
               வந்துபெண் ணாகவேன் பிறந்தேன்
          துன்பினை விடுத்தே னெங்கைமீ ருங்கள்
               தோழமை தனைவிழைத் தடுத்தேன்
          முன்பினு மறியே னிடத்துநீர் கொண்ட
               முறைமையா லுய்ந்தன னென்றாள்.


       57. இன்னண மான பின்னிரா வணனு
               மேவன்மா மகளிரைக் கூவி
          இன்னவட் கிலங்கை வனப்பினைக் காட்டி
               யாதொரு குறையுமில் லாமல்
          மன்னிய வசோகச் சோலைசூழ் மணிமா
               மண்டபக் குரியவ ளாக்கி
          நன்னருற் றிருங்க ளென்றுமே யேவ
               நங்கையுந் தொழுதுமே சென்றாள்.

       58. அயலவர் யாரு மாங்கடை யாம
               லருந்திறன் மறவரை யமர்த்திக்
          கயல்விழி கணவன் ஈங்குறு காறும்
               காத்திடு வீரெனப் பணிப்ப
          வயமிகு மறவ ரிமையினிற் காத்தர்
               மனைவியைப் பறிகொடுத் தினைவோன்
          செயலினை யெனவென் றவாவுநர் காணத்
               தெரிதர விரித்தினி துரைப்பாம்.
 
5. மனைதேடு படலம்
 
கலி விருத்தம்
 
       1.  வண்டமிழ் மறவரால் வளைக்கப் பட்டவன்
          கண்டன னெரிசினங் கனன்று பொங்கவே
          உண்டிதோ வுங்கட்கு முயிரு கொல்லியே
          கொண்டன னென்றுகை கொடிய வில்லினை.
-------------------------------------------------------------------------------------------
56. வன்புலை - கொலை, வலிய புலையும் கொலையும். 1. உண்டு இதோ என்று வில்லினைக் கைக் கொண்டனன்.