பக்கம் எண் :


இராவண காவியம் 385

   
       10. பெண்ணவ ளிறந்தவட் பிரிந்த துன்பினால்
          அண்ணிட நீதனி யாய யோத்தியை
          நண்ணுவை கைகயி நனியு வப்பளா
          அண்ணலெந் தாய்துய ரடைவ ரென்செய்கேன்.

       11. சூதுசெய் தேயெனைத் துறக்கச் செய்தனர்
          மாதமிழ் மறவர்கள் வஞ்சந் தீர்த்திடக்
          கோதையை யிதற்குளே கொன்றி ருப்பரே
          யாதுசெய் வேனென அழுது கொண்டுபோய்,

       12. இலைக்குடில் பார்த்தவ ளிலாதி ருக்கவே
          இலக்குவா நீயிருக் கிறாயென் றல்லவோ
          கலக்குறா தேகினன் கனியை நம்மிடை
          விலக்குற வேன்றனி விட்டு வந்தனை.

       13. என்றன னேங்கின னிங்கு மங்குமாச்
          சென்றனன் தேடினன் தேடி கண்டிலாக்
          கன்றினன் கதறினன் கடிந்து தம்பியை
          அன்றிலி னிலைமையை யடைந்து நின்றனன்.

       14. ஒருவிய பறவைதம் முடைய கூட்டிடை
          மருவிய பேடையை வறிது காண்பொடு
          பொருவரு பெரும்பொருள் புதைத்து வைத்ததை
          ஒருமகன் கவர்ந்திட வுடையன் போன்றனன்.

       15. சீதையே இலக்குவா என்னந் தேம்பியே
          கோதைநீ கூவிய குரலைக் கேட்டதும்
          போதுக வென்றனள் புலம்ப விட்டுனை
          போதல்தீ தென்னயான் புலந்து தேவியும்.

       16. சீறியே பாம்பெனச் சினந்து செல்லெனக்
          கூறினாள் என்னயான் கூவ வில்லையே
          மாறுபா டாய்தமிழ் மறவன் கூவியிவ்
          வூறுபா டாக்கினன் என்ன வொள்ளியோய்.

       17. பின்னருங் கடுமொழி பேசிச் செல்லென
          முன்னனுக் கொருமுறை மூண்டி டாதுகாண்
          என்னவுன் னருந்திற லெடுத்துச் சொல்லியும்
          அன்னவள் கேட்டிலள் அழுது வைதனள்.
-------------------------------------------------------------------------------------------
       10. அண்ணிட - அவளோடிருக்க. அண்ணல் - பெருமை. 15. புலம்ப - தனியாக. 16. மாறுபாடு ஆய் - மாறுபாட்டை ஆய்ந்தறிந்த.