18. அடியனா னெவளவோ ஆவ கூறியும் படிறநீ யென்னைக்கைப் பற்ற வெண்ணியே கொடியனு நீயுமுன் கூடிப் பேசியென் னிடமுனைக் கொல்லவந் தாயென் றேசினாள். 19. ஆதலா லதுபொறுக் காமல் வந்தனன் மாதமிழ் மறவர்கள் வளைத்துக் கொண்டனர் ஏதியான் செய்குவேன் என்ன முன்னனும் ஆதகா தவளைவிட் டகன்று வந்ததே. 20. துணர்ததை குழலியர் சொன்ன சொல்லினை உணர்வுளான் பொருட்படுத் துவனோ என்சொலைப் புணரிலை வேறிடம் பொதிந்தி ருந்துநீ இணர்குழல் தன்னைக்காத் திருக்க வேண்டுமால். 21. அன்றியு மென்மொழி யதனைத் தட்டியே நன்றிலை பெண்சொலை நம்பி வந்துமே மன்றலங் குழலியை மணி்ப்பொற் பாவையை இன்றொடு பிரித்தனை எனவுள் ளேங்கியே. 22. குடிசையி னுள்ளலங் கோலங் கண்டுமே கொடியவர் சீதையைக் கொன்று விட்டனர் வடிமலர்ச் சோலையை மாவைப் புட்களை கடிதிலெம் மனைவியைக் காட்டு கென்றனன். 23. ஓடினான் கானகத் தோடி எங்கணுந் தேடினான் திசைதிசை தேடித் தம்பியைக் கூடினான் கொம்பினைக் கொள்வ னோவென வாடினான் பாடினான் வாய்விட் டாவெனா. 24. கண்ணிமை கொட்டினன் கைபி சைந்தனன் மண்ணினைத் தூயினன் வயிற்றைத் தாயினன் எண்ணினை யிழந்துநின் றேமுற் றேங்கினன் உண்ணிய மூச்செறிந் துலறிச் சோம்பினன். 25. அன்னவள் எண்ணம்போ லாயிற் றெம்பியான் இன்னுயிர் விடுகிறேன் அயோத்தி ஏகிநீ பொன்னியல் மணிமுடி புனைந்து மக்களுக் கன்னைபோன் றனையர சாளச் சொல்லுவாய். ------------------------------------------------------------------------------------------- 18. படிறன் - வஞ்சகன். கொடியன் - பரதன். 20. துணர் - பூங்கொத்து. ததைதல் - செறிதல். புணரிலை - மதித்திலை. பொதிந்து - மறைந்து. 24. எண் - எண்ணம். | |
|
|