26. என்றின பலசொலி இரங்கிப் பின்னவண் நின்றடிச் சுவடுசொல் நெறியிற் கூடிப்போய்ச் சென்றடித் தேரினைத் தெரிந்தை யோவென ஒன்றடித் தாரைமேல் ஓய்ந்து வீழ்ந்தனன். 27. என்றுனைக் காணுவேன் எங்குச் சென்றனை தென்றலங் குழலியார் எடுத்துச் சென்றனர் கொன்றொழித் திருப்பரே கொடியர் யானினிப் பொன்றுவேன் என்றவன் புலம்பத் தம்பியும், 28. இன்பமுந் துன்பமும் எவர்க்கு மொத்தவே என்பயன் யாரெடுத் தேகி னாலென பின்பவள் வீயிலென் பெரிதுந் துன்புறல் தன்பொரு வீரர்க்குத் தகுதி யாகுமோ. 29. கள்ளரைக் கண்டியாங் கடிந்தொ றுப்பதே கொள்ளுதற் குறித்தெனக் கூறித் தேற்றவே உள்ளதே யாமென வுணர்ந்து முள்ளுயிர்ப் பள்ளியே பெருந்துயர் அலைப்ப ஆற்றிலான். 30. நாட்டினை யிழந்துநன் னகரை நீங்கிவான் காட்டினை யடைந்துகாய் கனிய ருந்தியின் பூட்டிய எனதுயிர்க் குயிரை யுமிழந் தோட்டிலாத் துயரினுக் குறையு ளாயினேன். 31. ஏனினும் வீந்திலேன் என்னத் தம்பியும் போனதை நினைந்தழல் புலமைக் கொத்தது தானல வெனவவன் றானுந் தேறியோர் மானடித் துண்டுபின் வழிக்கொண் டாரரோ. 32. தென்கிழக் காயவர் செல்லு மாற்றிடை மின்களுக் குறையெனு மேனி தாங்கிநற் பொன்கலத் தொருதமிழ்ப் பூவை யாரென வன்கொலைப் பாவியம் மயிலின் சாயலை. 33. மறியெனு மிருவிழி மருவுங் காதொடு நறுமண மலர்குமிழ் நலங்கொள் மூக்கையும் உறுமண வினைபுரி ஒருவற் கல்லதை அறிகிலா வுறுப்பையும் அறுத்துக் கொன்றனன். ------------------------------------------------------------------------------------------- 26. தேர் அடி. அடி - சக்கரப்பாதை. 32. வன்கொலைப் பாவி - இலக்குவன். இத்தமிழ்ப் பெண்ணே அயோமுகி என்னும் அரக்கி எனப்பட்டாள். | |
|
|