பக்கம் எண் :


இராவண காவியம் 395

   
       22. எம்பி யோடுநீ சேர்ந்துவந் திருக்கிறா யென்று
          வம்பு லாங்குழல் மாதவள் சொன்னதை மறுத்தே
          நம்பி னேனுனை முறைதவறா நல்லவ னென்று
          கெம்பி லாமொழிக் கயவனீ யரசியல் கெடுத்தாய்.

       23. மறைவி னின்றுகூ ரம்பெய்து கொல்வது வடநூன்
          முறைமை யோவல திறமையோ வறிவிலா மூடா
          பொறியி லாய்பிற னோடியான் பொருதிடும் போழ்தத்
          தறிவி லாய்மறைந் தம்பெய்த லாண்மையோ வறமோ.

       24. மறைந்தி ருப்பதை யறிந்திலே னறிவிலா மடையா
          அறிந்தி ருப்பனேற் படிறனே நொடியினி லாங்கே
          இறந்தி ருப்பையான் என்செய்தே னுன்றனுக் கிழிஞா
          துறந்த கோலத்துப் புற்பொதி கிணறன துகளோய்.

       25. தாரை யென்னென சொல்லியு நானதைத் தட்டி
          வீர னென்றுனை மெச்சினேன் பொய்பொதி மெய்யா
          வீர ருக்குள பெருமையைக் கொன்றுமே வீழ்த்த
          பூரி யாவுனக் கென்னிடை யூறியான் புரிந்தேன்.

       26. அல்ல னென்றனன் அங்கத னெந்தையே யறிந்தேன்
          பொல்ல னும்பியோ டடைந்ததை யென்றனன் போப்போ
          நல்ல னென்றனன் முன்புதா யொடுமகன் நவின்ற
          சொல்லை யுண்மைய தாக்கினை நேரிலாத் துரும்பா.

       27. உன்ற னாட்டினில் வந்துசெய் தீமைதா னுண்டோ
          அன்றி யுன்னுடன் பொருதயான் வந்தனோ வறைவாய்
          கொன்று ணீகுற்ற மற்றவென் றன்னையேன் கொன்றாய்
          ஒன்று வன்கொலை யேயுரு வாகிய வொருவா.

       28. வேட்டை யாடுத லரசருக் கியல்பென விளம்பில்
          ஊட்ட மிக்கமா னாமுய லாபன்றி யுடும்பா
          நாட்டை யாளர சன்புலா லுணமிக நறிதோ
          கேட்டை யேன்விலை கொடுத்துவாங் கினைமுறை கேடா.
-------------------------------------------------------------------------------------------
       22. மாது - தாரை. கெம்புதல் - உயர்த்துப் பேசல். 23. இறைமை - தலைமைக் குணம். பொறி - அறிவு. 24. புல்லால் மூடப்பட்ட கிணறு. துகள் - குற்றம். 26. அல்லன் - அவனல்லன். அங்கதன் - வாலி மகன். நல்லன் - அவனோடு சேர்ந்து பொருதற்குவர இணங்கான், அவன் நல்லன். 28. ஊட்டம் - நல்லது. நறிது - சுவையுள்ளது.