37. எனையி ழந்தவென் னெம்பியை நண்பனா வெய்தி முனையி ழந்துமே மறைந்துநின் றென்னுயிர் முடித்தாய் தனையி ழந்தமற் றவர்கொலை புரிதறு தலைநீ மனையி ழந்தனை மதியிழந் தனையட வறியா. 38. உன்றன் றேவியை யெடுத்துமே சென்றவ னுயிரைக் கொன்றி லாதட வீணனே யென்னையேன் கொன்றாய் அன்றி யானுனை யழைத்தனோ பொரவுனை யரசன் என்று கொண்டவுன் மக்கட்குக் குறையொன்று மிலையே. 39. இனைய பற்பல நன்மொழி புகன்றிட விராமன் எனது நண்பற்குப் பகைவனீ யெனக்குமே பகைவன் உனையொ றுப்பது முறைமையே யுனைக்கொல்வ தாக உனது தம்பிக்கு முன்னரே கொடுத்தன னறுதி. 40. அறைக டலுல கெங்களுக் குரியதே யாகும் நெறியி னோடதைப் பரதனாள் கின்றனன் நெறியிற் பிறழுந் தீயரை யொழித்துல கோம்பலிற் பிறழேன் முறையி லாவுனை மறைந்துநான் கொன்றது முறையே. 41. கருத்து மாறியான் கொன்றில னெனச்சிலைக் கையன் பொருத்த மற்றபுன் மொழிபல செருக்கொடு புகன்றான் ஒருத்தி தன்னல மிழந்திடத் தமிழ்மக ளுலைய வருத்த மிக்குயிர் விட்டனன் வான்புகழ் வாலி. 42. தாரை தாரையா யூற்றிருந் தொழுகிடத் தடங்கண் தாரை யோவெனக் கதறியே புல்லினள் தாரை சார மற்றபா ழிளையவ னொருவனைத் தவிர ஊரெ லாந்திரண் டோவென வழுதன வொருங்கே. 43. உரைசெ யுந்தமி ழரசனா கியவற வோனைக் கரிச னத்துட னடக்கியே கோடரிக் காம்பாம் வரிசை தப்பிய விளையற்கு மணிமுடி சூட்டி அரச னாக்கியே யாரிய ரகத்தினை யடைந்தான். 44. மாரி யைப்பொரு வள்ளலை யொழித்திள வஞ்சன் சீரி யற்படு தமிழர்க ளுரிமையைச் சிதைக்கும் ஆரி யப்படை யோடிரண் டகப்படை யாக்கும் காரி யப்பட வாண்டனன் கசந்துகிட் கிந்தை. ------------------------------------------------------------------------------------------- 37. எனைஇழந்த - என்னை வெறுத்த. முனை - போர்க்களம். தனை இழத்தல் - தன்னறிவற்றல். தறுதலை - கெட்டவன். 41. ஒருத்தி - தாரை. உலைய - வருந்த. 42. தாரை - நீரொழுக்கு. தாரை புல்லினள் - மாலையணிந்த மார்பின்மீது விழுந்தனள். | |
|
|