7. கண்ணுறு படலம் | கலி விருத்தம் | 1. மண்ணுற வாலியை மறைந்து கொன்றுபின் நண்ணுற முடிபுனை நகுதல் கண்டனம் அண்ணலுந் தேவியோ டணைந்து சீதையைக் கண்ணுறு மியல்பினைக் காணு வாமரோ. 2. பூவலர் பொலங்கழற் பொருவிற் றானையான் நாவலர் நயம்பட நவிலு நற்றமிழ்ப் பாவலர் பொருளெனப் பரந்த சீர்த்தியான் ஏவலர் தனியுற எழுந்து போயினான். 3. போனவன் மரமடர் புனத்து வாழ்தரு மானினஞ் சூழ்தர வண்ண மாமயில் தானெனத் தோழியர் தம்மொ டாடிள மேனிநல் லாளமர் நிலையை மேவினான். 4. மேவிய திருவுடை வேந்தர் வேந்தனைப் பூவைய ரிடையொரு பொன்னம் பாவையும் நாவலர் உள்ளமும் நயப்ப வாடுவாள் காவியங் கண்ணிணை களிப்பக் கண்டனள். 5. கண்டதும் வெறிதென நீத்துக் காவினை வண்டமர் கருங்குழல் மாதர் மாதரும் வண்டமி ழிசைநுகர் மன்னர் மன்னனைத் தண்டமிழ் வாய்மலர் தவழச் சார்ந்தனள். 6. சார்ந்தவக் காதலந் தையல் கையினை வேந்தனும் பற்றியாழ் விரும்பு மென்மலர்க் கூந்தலைத் தடவியொண் குழையை நீவிநாட் பூந்தொடை திருத்தியொப் புரவு செய்தனன். 7. காதலங் கண்ணியுங் கதிர்வை வேலவ போதினை நாடிடும் பொலங்கை வண்டர்போல் ஏதிவ ணேவலர் இருக்கத் தாங்களே மாதெனை நாடியே வந்த தென்றனள். ------------------------------------------------------------------------------------------- 2. பாஅலர் - பாட்டிலுள்ள. 6. யாழ் - வண்டு. | |
|
|