8. அப்படி யொன்றிலை அரிவை சீதையும் எப்படி யுள்ளனள் எழிலுக் கோர்புகல் செப்பெனத் தமிழிசை யேழுஞ் சேர்தரும் வைப்பெனப் பேசிடும் மழலைச் சொல்லியே. 9. ஓதெனப் பேரியாழ் ஒழுங்கு பட்டபோற் காதலன் பிரிவெனும் கவலை யொன்றலால் யாதொரு குறையுமில் லாது செந்தமிழ் மாதர்க ளொடுதக வாழு கின்றனள். 10. நானொரு நாலைந்து நாட்கு முன்னங்குப் போனபோ தருந்தமிழ்ப் பூவை மாரொடு யானுமுள் ளுவப்பநல் யாழை மீட்டியே ஏனவள் ஏழிசை இனிக்கப் பாடினள். 11. திருத்தமாச் செந்தமிழ்த் தெரிவை மாரொடு வருத்தமில் லாதுவாய் மலரு முள்ளமும் பொருத்தமாப் பொருளொடு பொலியச் செந்தமிழ் பெருத்தகட் டமிழ்ச்சிபோற் பேசு கின்றனள். 12. அடிக்கடி கேட்டியான் அவட்கு வேண்டுவ முடிக்கிறேன் பகையெனும் மூரி வேலையை நொடிக்குளே குடித்திடும் நூறி வேலவ நடக்கலா மாங்கவள் நலத்தைக் காணவே. 13. என்னவே குயிலொடு பூவை யேந்தெழிற் பொன்னென வொளிர்முகப் பொலங்கைக் கிள்ளையும் இன்னலுற் றினைதர இசைப்ப மன்னவர் மன்னனுஞ் சரியென மகிழ்ச்சி கொண்டனன். 14. தங்கையைக் கண்ணுறுந் தகுதிப் பாட்டினில் எங்கையை யுருக்குலைத் திட்ட பாவியின் மங்கையைக் கண்ணுற மனக்கொண் டானெனில் இங்கதி ராவணன் இயல்புக் கெல்லையே. 15. சாந்தமு மாலையுஞ் சரிகைச் சேலையும் காந்தொளி யணிமணிக் கலனு மேனவும் மாந்தளிர் மேனியர் வளைக்கை நோவுற ஏந்தியே சூழ்வர ஏசி னாரரோ. ------------------------------------------------------------------------------------------- 8. புகல் - புகுமிடம். வைப்பு - இடம். 12. மூரி - பெரிய. | |
|
|