16. எண்ணிய படியவ ணிருந்து சென்றுமே திண்ணிய வரணமை செயலைக் காவினை அண்ணலுந் தேவியோ டடைந்து சீதைவாழ் தண்ணிய மாளிகை தன்னை நண்ணினான். 17. தந்தைதா யாமெனத் தமிழர்ப் போற்றிடும் செந்தமிழ் வேந்தனைத் தேவி தன்னொடும் சிந்தையுள் மகிழ்வுறச் சீதை கண்டதும் வந்தனள் எழுந்துமுன் வணங்கி நின்றனள். 18. வணங்கிய சீதையை வாழ்த்தி மன்னவன் மணங்கமழ் காவக வாழ்க்கை மேவிய கணங்குழை யொருகுறை யி்ல்லைக் காணென நுணங்கிடை யெதிர்மொழி நுவல லாயினாள். 19. என்னருந் தந்தைதாய் எனவென் வாழ்வினில் முன்னிய கருத்துடை முதிர்ந்த வன்புளீர் பின்னொரு குறையிலைப் பிரிந்து காடுறை மன்னவ னிலாக்குறை வருத்து கின்றதே. 20. வில்லினை வளைத்ததன் விளைவி னாலவன் மல்லலந் தோளினை மணந்த தெண்ணியே புல்லிய பலபகல் போக்கி னேனினிச் செல்லென விடுப்பதுந் திருவு ளச்செயல். 21. என்றவள் மொழிதர இலங்கை வேந்தனும் கொன்றையங் குழலியுன் கொழுநன் கானிடை என்றமர் களுக்கிட ரியற்றிக் கொண்டுமே வென்றிவில் லாளியாய் விளங்கு கின்றனன். 22. அருந்தமிழ் மக்களின் கொலையை அன்னவன் விருந்தென நாடொறும் விரும்பிச் செய்குநன் பெருந்தமி ழரசரைக் கொன்று பின்னரும் கருந்தொழில் செய்தெமைக் கனற்று கின்றனன். 23. கிளர்வள முடையகிட் கிந்தை மன்னனாம் வளமலி யருந்திறல் வாலி யாவியை உளமலி சிறுபகை யொன்று மின்றியே குளமலி யல்லிபோற் கொய்து கொன்றனன். ------------------------------------------------------------------------------------------- 16. செயலை - அசோகு. | |
|
|