31. அலங்கிய பாவியால் ஐய நீள்மதில் இலங்கைவாழ் தமிழருக் கிடருண் டாகவோ பொலங்கழ லோயெனைப் போக்கி யாண்மெனக் கலங்கிய மொழிகளாற் கரைந்து வேண்டினாள். 32. அவ்வுரை கேட்டலும் அண்ணல் அம்மணி இவ்வுல கத்தினில் இலங்கை முற்றிடும் செவ்வியர் உளரெனல் செவிடன் ஏழிசை ஒவ்விய திதுவென உவத்தல் போலுமே. 33. திருமதி யுனையவண் சேர்த்த பின்னவர் வருவதைத் தடுப்பவர் யாவர் மன்னவர் பொருவதற் கஞ்சுதல் பூனை யோரெலி வருவதற் கஞ்சுதல் மானு மல்லவோ. 34. மாதுநீ வருந்தலை மறைந்து வாலியைக் காதியே கொன்றவுன் கணவன் பாலொரு தூதனை யனுப்பியிங் கடையச் சொல்லியே போதலர் குழலுனைப் போக்கு கின்றனன். 35. கன்னலஞ் சொல்லியுன் கணவற் கஞ்சிமா மன்னவர் எள்ளுற வலியப் போமென உன்னையங் கனுப்புதல் உரனும் மானமும் முன்னிய வெனக்கது முறைமை யல்லவே. 36. ஆதலால் வந்தபின் அனுப்பு கின்றனன் மாதுநீ முன்னைபோல் வருத்த மற்றிரு கோதையீங் குனக்கொரு குறையுண் டாமெனிற் பாதுகாப் பிலையெனப் பழிப்ப ரல்லரோ. 37. அஞ்சலை தமிழர்கள் அன்பும் ஆண்மையும் கொஞ்சியே உறவுகொள் குணத்த ரென்பதை வஞ்சியே யறிந்துநீ மகிழ்வை யுன்னைநான் வஞ்சியே னென்றிறை மறுத்துக் கூறவே. 38. சோர்குழல் துயரலை என்று தூயவண் டார்குழல் தேரன மளித்துத் தேற்றவே கார்குழல் சரிசரி கடிது சேர்த்துமிவ் வார்குழல் தனையென வணங்கிக் கூறினள். ------------------------------------------------------------------------------------------- 31. அலங்குதல் - தத்தளித்தல். 35. கன்னல் - கரும்பு. முன்னிய - மிக்க. | |
|
|