7. அன்றியான் தனிய ளாயை யாலிடை யிருந்த போது கொன்றிடா தெடுத்து வந்தோர் குறைவிலா திளையாள் போல இன்றள வினும யோத்தி யெனமதி லிலங்கை தன்னில் நன்றியா னிருத்த லண்ணல் நாணய மேம்பா டன்றோ. 8. கொங்கல ரகழி பூத்த கொடிமதி லிலங்கை வேந்தன் தங்கையை யெளிய ளென்று தமிழர்கள் மனம்புண் ணாக நுங்கினை யரிதல் போல நுண்ணுருக் குலைத்தே கொன்றும் மங்கையை யிழந்து கான வாழ்வினை மதித்தீர் போலும். 9. தனித்திவண் வருதற் கஞ்சித் தமிழர்கள் துணையைத் தேடல் இனித்தமி ழிறைவன் உள்ளத் தெரியினை மூட்ட லன்றோ எனைத்தனி யிருத்தி யீங்கே இறையொடு பொருத வெண்ணல் பனித்துளி வெயிலைக் கூடிப் பகலொடு பொரல்போன் மன்றோ. 10. தீயினைக் கொண்டு மற்றோர் தீயினை யவித்தா லந்தத் தீயொரு பெருந்தீ யாகித் தெறுதல்போ லெம்மீ ரேனோ தூயசெந் தமிழர் தம்மைத் துணைக்கொடு தமிழர் கோனை மாயவென் றிடவே யெண்ணல் மண்டெரி யதுவா மன்றோ. 11. எலியுள வளையி னுள்ளே யிட்டொரு நல்ல பாம்பை வலியுற வேயப் பாம்பை மருளுற வருத்தல் போல மலிபுன லிலங்கை மன்னன் மரபினைக் கொன்று கொன்று கலிசின மூட்டி யென்னைக் கலுழ்ந்திடச் செய்வார் போலும். 12. புலியுள பொறியி னுள்ளோர் புள்ளிமான் றன்னை விட்டப் புலியையம் பெய்து செற்றம் பொங்கிடச் செய்தல் போல ஒலிபுன லிலங்கை வேந்த னுறவினைக் கொன்று கொன்று மலிசின மூட்டி யென்றன் வாழ்வினைக் கெடுப்பார் போலும். 13. இன்னுமெத் தனைநா ளைக்கீங் கிருக்கவிட் டிருப்ப ரோதான் பின்னவ னெனது கூற்றாற் பெரிதுமுட் பகைகொண் டானோ அன்னவள் கிழவி யென்றே அவரெனை மறந்து வேறு கன்னியை மணந்து கொண்டு காதலாற் களிக்கின் றாரோ. 14. படையொடு வந்தா லிந்தப் பாவியி னாவி போகும் நொடியினிற் றனிய ராக நுழைகுவீ ரிலங்கைக் குள்ளே மடிகுவே னினியுண் ணாது வருவது தவிர்வீ ராகில் அடியனை மறந்திட் டீரோ அழகனே எனவல் லாக்கும். ------------------------------------------------------------------------------------------- 10. மண்டு எரி - மிக்க தீ. 14. அல்லாக்கும் - வருந்துவள். | |
|
|