15. ஒருவகை யில்லேன் பொல்லே னுயர்மதி லிலங்கை வந்து பொருவது மேலுந் துன்பம் பூண்பதாம் தனிமை யாக வருவது துணியார் போலும் வாழ்கிலேன் பாவி யென்றே இருதலைக் கொள்ளி நாப்ப ணெறும்புபோற் றுடித்திட்டாளே. 16. இன்னணம் பலவா றாக இயல்வதை யறிகி லாது முன்னது பின்ன தாக முரண்படத் தனிய ளாகச் சொன்னதைக் கிள்ளை போலச் சுழல்படப் பிரிவாற் றாது பின்னரும் சொல்லிச் சொல்லிப் பித்திபோற் பிதற்றி னாளே. 17. வாடிய முகமும் எண்ணி வறண்டதோ ருளமுந் தீரா நீடிய துயருந் தாங்கி நெடுங்கணீர் உதிர்க்குங் காலைப் பீடணன் என்னப் பெற்றோர் பெருமையா யிட்ட பேரான் தேடிய செல்வ மான திரிசடை யாங்கு வந்தாள். 18. வந்தவள் அம்மா நீயும் வருந்துதற் குனக்கீங் கென்ன வந்தது துயரே லுன்றன் மன்னவன் செயலே தேனும் வந்ததோ செவிக்கு மேனி வாட்டுமே தேனு மோர்நோய் வந்ததோ இன்ன தென்று வகுத்துரைத் திடுவா யென்றே. 19. கண்ணிணை மலரைப் பூத்த காந்தள்மென் மலரா லுள்ளத் துண்ணினைந் துதிரு முத்த வொழுக்கறத் துடைத்து நல்யாழ்ப் பண்ணினைந் தயரப் பேசும் பழந்தமிழ்ச் சொல்லா லம்மா எண்ணின வெண்ணந் தன்னை யியம்புதி யொளியா தென்றாள். 20. அன்றியு மெங்கள் தந்தை யாகிய இலங்கை வேந்தன் அன்றுன துளஞ்செம் மாக்க அருளிய உறுதிச் சொல்லைப் பொன்றினுந் தவற மாட்டார் பூவையே துயரை விட்டு நன்றுன துளக்கோட் டன்னை நவிலென நவில லூற்றாள். 21. என்றன தழிவைப் போக்கி யெனதுவாழ் வுனது வாழ்வாய் ஒன்றிய படிகொண் டோவா துதவுமென் னுரிமைத் தோழி உன்றன துதவி யேயென் னுயிரின தருங்காப் பாகும் அன்றிவே றில்லை யென்ப தறைதலும் வேண்டு மோதான். 22. செந்தமிழ் பயில்வாய் நங்காய் செய்திகே ளுனது மூத்த தந்தையுந் தாயு மீங்குச் சற்றுமுன் வந்து போனார் வந்தவர் சொன்னா ரென்றன் வாழ்வையிவ் வாறு செய்தோன் வெந்தபுண் ணதிலே காய்ந்த வேனுழைத் திடுமோர் செய்தி. | |
|
|