பக்கம் எண் :


இராவண காவியம் 407

   
        30. செருவெனா முன்னர் யானுஞ் சிந்தைநொந் தழவே யுந்தை
           வெருவுறல் வரட்டு முன்னை விடுப்பலென் றுரைத்துப் போனார்
           முருகலர் குழலி வெம்போர் மூளுமேல் வெற்றி தோல்வி
           இருவரி லொருவ ரன்றோ எய்துத லியற்கை யாகும்.

        31. அன்றியு மிலங்கை மூதூ ரரணழித் தெளிய எம்மோர்
           வென்றிவே லண்ணல் தன்னை வெல்லுத லொல்லு மோநீள்
           குன்றுறை யரிமா னேற்றைக் குறுநரி வெலுமோ பின்னர்ப்
           பொன்றுத லல்லா லெற்குப் போக்கிட முண்டோ சொல்லாய்.

        32. நன்றென துரிமை முற்றும் நான்பெற வளித்த அண்ணல்
           ஒன்றியே வுதவிக் கேற்ற உயரிய கைம்மா றாக
           மன்றலங் குழலி மாயா வன்கொடும் பாவி யானும்
           தென்றமி ழிலங்கை தன்னைச் செருக்களத் தாழ்த்து வேனோ.

        33. அக்கையாய்த் தங்கை மாரா யன்னையாய்த் தோழி மாராய்
           ஒக்கலா யுறவாய் நாளும் உடன்பயி லாய மாயன்
           புக்கொரு நிலையா யென்னைப் பொருந்திய இனத்தை ஏங்க
           வைக்கவோ பாவி யானும் வருவிருந் தானே னம்மா.

        34. என்னவே பின்னோன் செல்வி யீதொரு புதுமை யன்று
           நன்னுத லிதற்கா வுள்ளம் நலிகுத லொழிக வாலி
           பின்னவ னென்ன விந்த உலகமே பெயர்ந்து போது
           மென்னினு மிலங்கை முற்றல் எளிதென நினைதல் வேண்டா.

        35. துடியிடை கனன்று சீறித் தொகைபடத் தொடர்ந்து மின்னி
           இடியொடு நெடிய வானம் இடிந்துவீ ழினுமே யுள்ளம்
           ஒடிபட லில்லான் கூகை யுளறல்கேட் டயிர்க்கு மோதான்
           கடிமதி லிலங்கை முற்றக் கனவுகா ணவுங்கூ டுங்கொல்.

        36. தென்றலி னினிய சாயல் தென்கட லுருமிற் சீறி
           அன்றுபோ லெழுந்து பொங்கி யணுகினு மிலங்கை மூதூர்
           முன்றிலி னாடல் பாடல் முறையொடு நிகழு மென்னில்
           பன்றியி னுறுமல் கேட்டுப் பதைக்குமோ வெந்தை யுள்ளம்.

        37. மான்றரு விழியாய் எங்கள் வண்டமிழ் மரபோ அன்று
           தோன்றிய முதனாட் டொட்டுத் தொடர்தர விடையீ டின்றிச்
           சான்றவ ராக்கித் தந்த தனியர சியற்றே ரூர்ந்து
           வான்றரு புகழி னோங்கி வருகிற திதுநாள் காறும்.