பக்கம் எண் :


408புலவர் குழந்தை

   
        38. மின்னிடை யிதுநாள் காறும் வெந்தொழில் புரிநின் கேள்வன்
           முன்னவ ரெதிர்ந்தே யெந்தம் முன்னவர் தம்மை வென்றார்
           என்னுமோர் செய்தி கேள்விப் பட்டது மில்லை யன்னான்
           துன்னெயி லிலங்கை முற்றத் துணிந்ததும் புதுமை யன்றே.

        39. கொந்தவிழ் குழலி யுன்றன் கொழுநனை விடுதி யன்னான்
           தந்தைமுன் தமிழ ராற்றல் தனைமதி யாது வந்தே
           எந்தைமுன் நிற்க லாற்றா தின்னுயிர் கைக்கொண் டோடி
           வந்ததை யினும யோத்தி மறந்துமே யிருக்கா தன்றே.

        40. காம்பன தோளி யிந்தக் கடலகத் திதுநாள் காறும்
           பாம்பினை யெதிர்த்துத் தேரை பகைத்துவென் றதுவுமுண்டோ
           ஆம்பொரு ளறியா வுன்ம ணாளனின் செயலை யெண்ணித்
           தேம்புத லொழிக வெந்தை திறலினை யறியாய் போலும்.
 
கலித்துறை
 
        41. புலியை யோர்குறு நரியெலிக் குழாத்தினைப் புணர்ந்து
           நலிய மற்றதன் குகையினை நண்ணுதல் போன்மே
           வலிய வாலிபின் னவன்பெரும் படையொடு வந்து
           ஒலியு லாங்கட லிலங்கையை முற்றவெண் ணுதலே.

        42. குன்றைப் போர்த்திடக் குரீஇயினங் குறிக்கொளல் போல
           வென்றிப் போர்பல கண்டவன் விறல்கெழு மிலங்கை
           துன்றப் பார்ப்பது வாலியி னுயிருண்டு சுவைத்தம்
           பொன்றைப் பார்த்தவன் துணிந்ததை யன்றிவே றுண்டோ.

        43. அலையைத் தூர்த்திட அணிற்குல மவாவுதல் போன்மே
           மலையைப் போர்த்ததோள் வாலியை மறைந்துமே கொன்ற
           சிலையைப் பார்த்துவந் திலங்கையை முற்றவச் சிலையின்
           நிலையைப் பார்த்திடா தேயவன் நினைத்ததன் நினைப்பே.

        44. வேலை நேரெதிர் நின்றுவில் வென்றது மற்றெக்
           காலு மில்லை யிலையினி முடிவுறு காறும்
           வாலி யின்னுயிர் தனையவன் வாங்கிய வாறு
           போல வேலைவில் வென்றதென் றாலது பொருந்தும்.

        45. புலியைப் போன்றெதிர்த் தேயிரு வோர்பொரும் போது
           மலையைப் போன்றவவ் வாலியின் கண்ணுறா வண்ணம்
           எலியைப் போன்றுபோந் தொளிந்துநின் றம்பினை யேவி
           அலியைப் போன்றொரு வனைக்கொலல் ஆண்மகற் கழகோ.
-------------------------------------------------------------------------------------------
        44. வேல் - தமிழரையும், வில் - ஆரியரையும் குறிக்கும்.