பக்கம் எண் :


இராவண காவியம் 409

   
       46. ஆவி போயவன் வில்வளைத் தம்பினை யவன்மேல்
          ஏவு முன்கணிற் கண்டிருப் பானெனி லின்றப்
          பாவி யின்பெரும் படையொடிப் பழநகர் முற்றப்
          பாவை யுன்கண வன்புறப் பட்டிருப் பான்கொல்.

       47. ஆகை யாலவன் படையெடுத் திலங்கையை யழித்து
          வாகை வேலினன் றனையவ னினத்தொடு மாய்த்துத்
          தோகை யேயுனை மீட்டயோத் திக்கவன் றுணிவாய்
          ஏகு வானெனு நினைப்பைவிட் டேயினி திருப்பாய்.

       48. கறந்த பாலென வலிதொலைந் தேபுறங் காட்டிப்
          பறந்து செல்வதும் படையிலா தணுகியுட் பகையா
          உறைந்து கொல்வதுங் கொல்வது மெம்மவ ருளவால்
          மறைந்து கொல்வதும் வழிவழி யாரியர் வழக்கம்.

       49. வென்றி வாலியைக் கொன்றது போன்றுமே மேனாள்
          உன்றன் முன்னவ ரென்முனோ ரொடுபொரு தோடி
          மன்ற லங்குழல் வஞ்சித்துப் பற்பல வகையிற்
          கொன்றொ ழித்தனர் எம்முனோர் பலரையக் கொடியோர்.

       50. ஆய்ந்து மூவினம் பயிர்க்கொரு பாதுகாப் பாகப்
          பாய்ந்து தின்றிடா தாக்கிய வேலியே பயிரை
          மேய்ந்த தென்னமெய் காப்பென வாக்கிய வெய்யோர்
          காய்ந்து கொன்றிட மாய்ந்தவெந் தமிழரோ கணக்கில்.
 
1. பொன்னன்
 
       51. திசையி றந்துசெல் லுந்திறை யின்றதாச் சென்று
          மிசைக ரந்துவான் கீழுற மேலதா மிசைய
          இசைப ரந்துதண் டமிழகத் தொருபுடை யினிதின்
          நசைசி றந்திட ஆண்டன னுயிரினு நல்லான்.

       52. அறத்தின் காவலன் அந்தண ராக்கிய அறத்தின்
          புறத்தின் காவலன் ஒன்னலர் கண்டிடாப் புறத்தின்
          நிறத்தின் காவலன் புலவர்வாய்ப் பொருள்நிறை நிறத்தின்
          மறத்தின் காவலன் தமிழ்நலங் கனிந்தநன் மனத்தான்.
-------------------------------------------------------------------------------------------
       46. ஆவிபோயவன் - வாலி. 50. மூவினம் - மாடு, ஆடு, எருமை. பிற உயிர்களும் கொள்க. பாய்ந்து - புகுந்து. 51. இறந்து - கடந்து; மிசைய - மேலாக. 52. அறத்தின் புறம் - அறவழிப்பட்டபுறம். புறம் - புறப்பொருள். கண்டிடாப் புறம் - முதுகு. நிறம் - மார்பு, உள்ளம்.