பக்கம் எண் :


410புலவர் குழந்தை

   
        53. ஒழுக்க மென்பதை யுயிரெனக் கொண்டவன் ஒழுக்க
           இழுக்க மென்பதை யிழிவெனக் கொண்டவன் இழுக்கப்
           பழக்க மென்பதைப் பகையெனக் கொண்டவன் பழக்க
           வழக்க மென்பதை மரபெனக் கொண்டவன் மாதோ.

        54. துலையி னின்றறங் கூறவை யதனிடைத் துணிந்தோர்
           நிலையி னின்றுபன் முறைதக வாய்ந்தற நெடுநூற்
           றலையி னின்றவர் சரியெனக் கொளும்படி தகவின்
           அலையி னின்றெழு மழையென முறைசெயு மறவோன்.

        55. ஆலின் வீழெனக் குடிகளைத் தாங்குவோன் அறவோர்
           நூலின் கீழிருந்த ரசியல் நடத்துவோன் நுதிகொள்
           வேலின் கீழிருந் தரும்பகை வென்றிடும் விறலோன்
           பாலின் கீழிருந் தெழுசுவை யனவுளப் பண்போன்.

        56. இன்ன னென்றொரு வருமிரங் காவர சியலோன்
           முன்னை யோர்முறை தவறிடா வறநெறி முறையோன்
           மன்ன னென்னுமச் சொற்பொரு ளுணர்மன மாண்பன்
           பொன்னன் என்னுமோ ரழகிய பெயரினைப் பூண்டோன்.

        57. அன்னை நேர்தரு மன்புட னாய்ந்துநல் லமைச்சர்
           சொன்ன சொல்லினைத் தூக்கிநல் லனவெனத் தோன்றும்
           அன்ன யாவையு மக்களுக் கரியவா வாக்கிப்
           பொன்னன் தன்னுயிர் போன்றுதன் நாட்டினைப் புரந்தான்.

        58. அடைய லர்வெரு வுறும்படி யருந்தமி ழண்ணல்
           கொடிநு டங்குநீள் முடியுடைய நெடுநிலக் கோயில்
           குடைநி ழற்பொலிந் தினிதுவாழ் குகவெனக் குடிகள்
           கடிமு ரசியம் பிடநிலம் புரந்திடுங் காலை.

        59. அடுத்து வாழ்ந்தவவ் வாரியர் தமிழர்தம் மன்பை
           விடுத்து வெய்துறச் செய்தனர் புலைக்கொலை வேள்வி
           தடுத்து நின்றசெந் தமிழரை யாரியர் தலைவர்
           எடுத்து வந்துபோர் புரிந்துபல் லின்னல்க ளிழைத்தார்.
-------------------------------------------------------------------------------------------
        54. நூல்தலை - நூலின்கண். அலை - கடல். 55. கீழ் - கண், இடம். 56. பொன்னன் என்னும் பெயர் தமிழரிடைப் பெருவழக்கு. இது பொன்னப்பன், பொன்னையன், பொன்னான், பொன்னுச்சாமி, பொன்னி, பொன்னம்மாள், பொன்னக்காள், பொன்னாள், பொன்னுத்தாய் என வழங்குகிறது. இதனை இரணியன் என மொழி பெயர்த்தனர் வடவர். இரணியம் - பொன். இரணியன் - பொன்னன்.