67. வஞ்ச நெஞ்சுடை யாரிய ரிருந்தவண் வாழ அஞ்சி யாங்குநின் றெரிபடு குழியென வகல எஞ்ச லின்றியே யியன்றவா றெலாமெடுப் பெடுத்துக் குஞ்சை யோம்பிடுங் கோழிபோற் காத்தனன் குடியை. 68. அண்ணன் போலவே யாரியர் மிகைசெயா தப்பொற் கண்ணன் காப்பமைத் திருநிலம் புரந்திடு காலை உண்ணி போற்றமி ழுடைமையைக் களவினி லுண்ட வண்ண முண்டிட வகையிலா துயங்கிய வடவர். 69. கனிது ழாவிய வின்மொழிக் கிள்ளைபொற் கண்ணன் பனிது ழாவிய கடலிடை யுடல்நலம் பழுக்க இனிது லாவிட வெண்ணியே தோணியி லேறி நனிது லாம்புகு பொருளெனக் கடலிடை நடந்தான். 70. தடையி லாதுலா வருகையில் மன்னவன் றன்னை உடனு றைபிணி யென்னமன் னவனம ரோடத் திடையி ருந்தவ ரவரொடு கரந்துட னிருந்த கொடிய னையகோ கடலிடைத் தள்ளியே கொன்றான். | கலி விருத்தம் | 71. நீறு பூத்த நெருப்பன தீயரை வேறு பாத்து விலக்கிவை யாதுநற் சோறு பாத்துச் சுவைத்துண வைத்ததாற் கூறு பார்த்துத் தமிழரைக் கொன்றனர். | 3. மாந்தரன் | 72. மோந்து நீல மலைதரு மூரிநீர் பாய்ந்து மூவளம் பண்ணுங் குடகடல் ஈந்து மேலும் இயற்றுமந் நாட்டினை மாந்த ரனெனும் வேந்தன் புரந்தனன். ------------------------------------------------------------------------------------------- 69. துழாவுதல் - கலத்தல், பொருந்துதல். 71. பாத்து - பகுத்து. கூறு - வேளை, சமயம். 72. மூரிநீர் - வெள்ளம். மூவளம் - நீர்வளம், நிலவளம், குடிவளம். மாந்தரன் - சேரன்; மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்னும் சேரன் பெயரைக் காண்க. இவனை, நரகாசுரன் என மொழி பெயர்த்தனர் வடவர். நரகர் - மாந்தர். ‘மக்கள் தேவர் நரகர் உயர்திணை’ என்பது நன்னூல். | |
|
|