73. ஏந்து விற்கொடி மாந்தரன் எந்தமிழ் வாழ்ந்த கத்தவ் வடபுலத் தாரியர் போந்து செய்த புலைக்கொலை வேள்வியைக் காந்த ழி்த்துக் கடத்தின னன்னரை. 74. அன்னர் தந்நா டடைந்து மறித்தவர் மன்ன னோடு வரத்தமிழ் மாந்தரன் முன்னெ திர்ந்து முனைந்து பொருதவன் தன்னை வெந்நிடச் செய்து தனித்தனன். 75. ஆற்ற லின்றியவ் வாரிய மன்னனும் தோற்று மாந்தரன் தும்பை களைந்துநன் மாற்று யர்ந்தபொன் வாகை புனைந்தினி தேற்ற மெய்தி யிருந்திடச் செய்தனன். 76. வடக்கு நோக்கியன் றோடிய மற்றவன் நடக்கை யாக்கிப் பலப்பல நாளினைத் தடக்கை விற்கிரை யாகத் தமிழரைக் கொடுக்க மாந்தரன் கேட்டுக் கொதித்தெழீஇ. 77. செந்த மிழ்ப்படை யோடவண் சென்றுமே மைந்து டன்வில் வளைத்தவ் வடவனும் நொந்தெ திர்நிற்க நோனா தயர்ந்திட எந்த மிழ்த்திற மிற்றெனக் காட்டினான். 78. இருவ ருமாஅங் கெதிர்ந்து பொருகையில் அருவி யன்ன வடர்வலி மாந்தரன் உருவி வாளினை யோங்க மிடலொடு வெருவி மற்றவன் வெந்நிடு வேளையில். 79. அற்றம் பார்த்தறம் பார்த்தில ளையகோ மற்ற வனம்னை யாட்டி மறைந்திருந் துற்று மாந்தரன் இன்னுயி ருண்டிட வெற்றி யென்னவோ ரம்பினை விட்டனள். 80. அருவி போற்றமி ழன்னைக்கண் ணீர்விடக் குருதி யம்பின்வாய்க் கொப்புளித் தோடிட மருவி யெந்தமிழ் மாந்தரன் மார்பினை உருவி யோடிய தோவக் கொடுங்கணை. ------------------------------------------------------------------------------------------- 77. நோனாது - ஆற்றாது. 80. ‘அருவிபோல்’ என்பதைக் கண்ணீர்க்கும், குருதிக்கும் கொள்க. | |
|
|