6. சம்பரன் | கலி விருத்தம் | 101. கன்னலன வின்சொலி கயற்கொடி யுயர்த்த தன்னிக ரெனத்தகைய சம்பரன் எனும்பேர் மன்னவன் மணித்தமிழ் வளர்த்தெம தமிழ்த்தாய் அன்னவனுந் தண்டமி ழகத்தையினி தாண்டான். 102. நீண்டவெண் மதிக்குடை நிழற்றிட நிமிர்ந்து மாண்டதமிழ் மக்களின் மனப்படி நடப்ப ஆண்டகையி னீண்டாரி யப்படை கடந்த பாண்டியனு மாண்டினிதி னாண்டுவரு காலை. 103. அன்னவன தாற்றலினை யாற்றுகில ராய நின்னவர் தமக்குறு நெடுந்துணைய னாவுன் மன்னவனை யீன்றவன் வயப்படையி னோடத் தென்னவனை யுன்மாமி தேருட னெதிர்த்தான். 104. மீனவ னறிந்துதமிழ் வீரருட னோடிப் போனவர் வெருவுறப் போயுட னெதிர்த்தான் ஏனவன தாற்றலை யெதிர்க்க வியலாமல் மானுனது மாமனும் மார்புபுற மானான். 105. வீரமொடு பாண்டியன் விடுத்தகணை போழ்ந்து மாரினை விருந்துண மயங்கியேயு னம்மான் தேரினிடை வீழவே திருப்பிமறு பக்கம் காரென விரைவொடு கடத்தினளுன் மாமி. 106. ஓடியே விரைவினி லுயிர்கொடு தனது பாடியை யடைந்துபினப் பாண்டியனின் வாளி கூடியவாய் நோயைக் குறைத்துமருந் திட்டு நாடியே செருக்களம் நடந்துமே யெதிர்த்தான். 107. இம்முறையு முன்போல எந்தமிழன் வாளிச் சும்மையொடு தேரின்மிசை தொப்பென விழவே அம்முறைபோ லிம்முறையு மாற்றலொடு தேரை இம்மெனவே பாடியி லிறுத்தனளுன் மாமி. ------------------------------------------------------------------------------------------- 102. மாண்ட - மாட்சிமையுடைய . 107. சும்மை - சுமை, அடி. | |
|
|