108. ஏந்துவலி மீனவ னெறிந்தகடி வாளி போழ்ந்தபெரு வாயினிடை போதரவே சோரி ஆழ்ந்ததுய ருற்றன னடுப்பதறி யாது வீழ்ந்தனன்வேல் பாய்ந்தபெரு வேழமென வன்னான். 109. ஆற்றலிழந் தோடியவுன் மாமனு மயிர்த்தே தோற்றனென வேகடிதோர் தூதனை விடுத்தான் சீற்றம தொழிந்தெங்கள் செந்தமிழர் கோனும் ஏற்றமொடு பாசறையை யெய்தின னிருந்தான். 110. போரணி களைந்துதமிழ் வீரர்கள் புறத்தே சீரணி யணிந்துறையுள் சேர்ந்தன ரிருப்ப ஊரணிய ராயவட ஒற்றர்களி னாலே தேரணிகொள் கேகயன் செல்வியஃ தறிந்தாள். 111. மற்றவள் கணவனை வலுப்பட வெழுப்பிச் சொற்றனள் தமிழ்மறவர் துஞ்சுநிலை தன்னை மற்றவன் மறுக்கவே மறந்துணர்வ தூட்டி வெற்றிபெற வேயிதுநல் வேளையென வாளன். 112. ஆட்டியவள் சூழ்ச்சியை யறிந்துமகிழ் வெய்தி வேட்டெழு படையொடு விரைந்தவ ணடைந்து பாட்டிலுறை மீனவனின் பாசறையை நண்ணிக் கூட்டிலுறை பார்ப்பெனக் கோட்புற வளைத்தான். 113. அற்றசிறை யப்புளை யகப்படுத லென்ன வெற்றிகொள் படைக்கலம தற்றிடுமவ் வேளை முற்றியே சடக்கெனவம் முத்தமிழர் கோனைப் பற்றியே யறங்கடை படுகொலை புரிந்தான். | அறுசீர் விருத்தம் | 114. வாட்டடங் கண்ணி யுன்றன் மாமியும் மாம னுஞ்செய் ஆட்டிற மில்லா வந்த அறக்கொடுஞ் செய்கை யன்றோ நாட்டினை விடுத்துக் காட்டை நண்ணிடச் செய்தே யுன்னை ஈட்டரும் புகழோ னூரில் இருக்கவுஞ் செய்த தம்மா. ------------------------------------------------------------------------------------------- 111. ஆளன் - கணவன். 112. பாடு - பெருமை. பார்ப்பு - குஞ்சு. 113. அகப்படுத்தல் என்பது, தொகுத்தல் விகாரம். அறங்கடை - கொடியவன். 114. ஆள்திறம் - போரில் எதிர்த்து நிற்கும் ஆண்மை. தசரதன் சூழ்ச்சிப் படலம் 73-75 செய்யுட்களைப் பார்க்க. | |
|
|