5. பாடறிந் தொழுகிடுந் தமிழர் பண்பொடு கூடிய வுரிமையைக் கொன்று மற்றவர் கேடுறப் பகைவரைக் கெழீஇமுன் கொல்லிய கோடரிக் காம்பினுங் கொடிய பாவியே. 6. மலையினு மாண்புடைத் தமிழர் வாழிய உலைவிலா வுரிமையை யொழித்து முன்னனைப் புலையுலாம் பகைவனைப் பொருந்திக் கொல்லிய கொலைவலான் கூட்டுறை குருவி போன்றவன். 7. தராதரந் தெரிந்தசெந் தமிழர் தாழ்வுற அராவினுங் கொடியவவ் வயலர் வாழ்வுறப் பராவுத லுறுமுனைப் பகையைச் சேர்ந்துகொல் அராவியே யிரும்புகொல் லரத்தைப் போன்றவன். 8. கடனறி தமிழர்கள் கரும்புக் கைதொழ வடவர்கள் தொழுதகு மரபின் வாழ்ந்திடத் திடமிகு தமையனைத் தெவ்வைப் போன்றுகொல் உடனெழு மரங்கொல்புல் லுருவி போன்றவன். 9. இளந்தமி ழிராவணற் கிளைய னாயினான் அளந்தறி கிலாமதிப் பிவருஞ் செம்மணி உளம்பட அராத்திடத் தொருங்கு தோன்றியே குளிர்ந்துகொல் நஞ்சினுங் கொடிய பாவியே. 10. திளைந்தசெந் தமிழர்கள் திருவுங் கல்வியும் அளைந்திட வுதவிடு மண்ணல் பின்னவை களைந்திடத் தோன்றிய கருங்கல் நெஞ்சினன் விளைந்தநெல் லொருவரு வெறுமை நெல்லனான். 11. சீரிய தமிழர்கள் சிறந்து வாழவே நேரிய முறைசெயு நெடிய வண்ணலோ டாரியர்க் கடிமையா யல்லல் செய்பவன் மாரியி னொடுவரு மடங்க லேயனான். 12. இழுக்கமில் தமிழர்கள் இழிவு பெற்றிட ஒழுக்கமில் ஆரியர் உயர்வு பெற்றிட முழுக்குடை மதிநிழல் முதிய னுக்கெதிர் விழுக்கனி யெதிரிடை வேப்பங் காயனான். ------------------------------------------------------------------------------------------- 5. பாடு - பெருமை. முன் - அண்ணன். 8. தெவ் - பகை. 9. அவிர்தல் - ஒளிவீசுதல். செம்மணி - மாணிக்கம். 10. திளைந்த - நிறைந்த. அளைதல் - கலத்தல். 11. மடங்கல் - இடி. 12. எதிரிடை - மாறுபாடு. | |
|
|