பக்கம் எண் :


422புலவர் குழந்தை

   
       13. நலம்படு தமிழர்கள் நலத்தை நன்றிலா
         அலம்படு மாரியர்க் காக்கித் தம்முனைக்
         குலம்படு களத்திடைக் கொன்று சால்புகொல்
         கலம்படு செம்பினிற் களிம்பு போன்றவன்.

       14. குடிமையா யாரியர் குலவத் தாயக
         முடிமையோ டிறைவனை முனையில் வீழ்த்தியே
         அடிமையாய்த் தமிழர்க ளலையத் தெவ்வராற்
         படியிலாழ் வாரெனும் பட்டம் பெற்றவன்.

       15. அடிமையுந் தீமையும் அவாவும் வஞ்சமும்
         கொடுமையுஞ் சிறுமையுங் கொலையுங் கூரமும்
         மடைமையும் பொய்மையும் மறமுங் கள்ளமும்
         படிமையாய் மகனெனப் படியில் வந்தவன்.

       16. அன்பில னருளிலன் அறமி லன்சலன்
         தென்பிலன் றிடமிலன் செம்மை நன்றிலன்
         முன்பிலன் மதியிலன் முறைமை கண்டிலன்
         இன்பிலன் மக்கட்பண் பெதுவு மில்லனே.

       17. தன்னல மென்பது தனக்கி லக்கியன்
         துன்னல ரடியில்வீழ் துறைக்கி லக்கணன்
         புன்னல மல்லது பொதுந லமிலற்
         கெந்லிந் தன்னிலு மிணையி லாதவன்.

       18. கராவிடை வாழ்ந்திடுங் கயவன் ஆரிய
         இராமனை நல்லனென் றியம்பி வாயினாற்
         பராவியே தம்முனைப் பழிக்கு நஞ்சுடை
         அராவினுங் கொடியவ னகப்ப கையினன்.

       19. மானமும் வெட்கமு மறைந்து தன்மதிப்
         பானது பாவியென் றகல ஆண்மையும்
         போனது பேடெனப் புலந்து புல்லெனத்
         தானவ னாகிய தனிமை வாழ்க்கையன்.
-------------------------------------------------------------------------------------------
       13. அலம் - நலமல்லது. கலம் - பாத்திரம். 15. கூரம் - பொறாமை. மறம் - பாவம். படிமை - வடிவு. 16. சலம் - தீராச்சினம். முன்பு - வலி. 18. கராவு - மறைவு, பொய்த்தவக் கோலம். 19. புலந்து - வெறுத்து.