பக்கம் எண் :


இராவண காவியம் 423

   
       20. வான்பிறந் தொளிர்கதிர் மானு மண்ணலோ
          டேன்பிறந் தானென்ப தெவரு மோர்கிலர்
          கான்பிறந் தெருக்கன்பால் கைப்ப இன்சுவை
          தான்பிறந் திடுநறை தம்மை யொக்குமால்.

       21. உடலிடைத் தோன்றியவ் வுடலொ டேவளர்த்
          துடலினை யூறுசெய் தொழிக்கு நோயனான்
          மடலிடைக் கருக்கினை மானுந் தீயவன்
          குடலிடைப் புண்ணினுங் கொடிய பாவியே.

       22. இரும்பினா லியன்றவா ளீர மற்றதே
          இரும்பினா லியல்துன மிணைத்துக் காத்தல்போற்
          கரும்பெனுந் தமிழிறை காக்கத் தம்மரை
          அரும்பகை யோடுசேர்ந் தழிக்கும் பாவியே.

       23. ஒட்டிய மதிவலி யுகுத்த பாவியைப்
          பெட்டைமெய் வருந்தியே பெற்ற தோகையாம்
          உட்டிகழ் கருவினோ டோடு மற்றபொய்
          முட்டைபோ லன்னையு முயன்று பெற்றனள்.

       24. நீடண வியமுகில் நிழலி லார்கொடிக்
          கோடண விலங்கையர் கோனைப் போலவே
          பீடண வுவனெனப் பேணிப் பெற்றராற்
          பீடணன் எனப்பெயர் பெற்ற புல்லியன்.

       25. கடித்துயிர் போக்கிடுங் கடிய பாம்பினை
          எடுத்தது நல்லபாம் பென்று கூறல்போல்
          மடுத்திடப் பெற்றவர் வைத்த பேரினைக்
          கெடுத்தவன் பாம்பினுங் கேடு கெட்டவன்.
-------------------------------------------------------------------------------------------
       20. நறை - (எருக்கம் பூவிலுள்ள) தேன். 21. மடல் - பனை யோலை. 22. மற்றதே - மற்றுஅதே. துனம் - துன்னம் - ஊசி. 23. மதிவலி - அறிவும் ஆற்றலும். பெட்டை - பெண் கோழி. உள் திகழ் - சில கோழிகள் ஒவ்வொரு சமயம் கருவும் ஓடும் இன்றிக் குழைந்த நிலையில் உள்தோல் மட்டுமுடைய முட்டையிடும். அது குஞ்சு பொரிக்காது. அது தோகை முட்டை, பொய்முட்டை எனப்பெயர் பெறும். தோகை - சருகு. 24. அணவிய - பொருந்திய. கோடு - கோபுரம். பீடு - பெருமை. பீடணன் - பெருமை பொருந்தியவன். 25. எடுத்தல் - சிறப்பித்தல். மடுத்திட - அழைத்திட.