34. என்றவள் சொலச்சரி யியன்ற மட்டிலும் ஒன்றிய செலவினுக் குதவி செய்வதாச் சென்றுநீ யவளிடஞ் செப்பு கென்னவம் மன்றலங் குழலியும் மகிழ்ந்து சென்றனள். 35. மற்றவள் சென்றபின் இலங்கை மாநகர் முற்றுதல் நம்மனக் கோளு முற்றுற நற்றுணை செய்திடு மென்று நஞ்சனான் வெற்றிகொண் டிருந்திடும் வேளை யாயிடை. 36. ஊரெரி தனக்குவந் துதவு காலென நேரிலா விழிதகை நீலன் போதர வாருமென் றிடவவன் வருத்த மென்னென சீரிலான் இரண்டகச் செயலைக் கூறுவான். 37. என்னருந் தோழவுன் னிடத்துக் கூறிடா தென்னரு மறையுள தெனது வாழ்வினை உன்னுயர் வாழ்வென உன்னு முன்றுணை தன்னையா னிழப்பது தகவ தாகுமோ. 38. எந்தையை யிளமையே யிழந்து விட்டனன் முந்தவ னடிமையில் மூழ்கி வாழ்கிறேன் மைந்தனு மிலையிறை மைந்த னானயான் நொந்தன னுயிர்பொறு நோன்மை யின்றியே. 39. முன்னவ னிறைவனா முடிபு னைந்திடப் பின்னவ னடிமையாய் பிழைக்க வோவந்தேன் என்னிது முறைமையோ எனக்குத் தோன்றில மன்னனா வாழ்ந்திட மனத்துட் கொண்டனன். 40. மன்னவன் வாலியைக் கொன்று மற்றவன் பின்னனுக் கரசருள் பெரிய வில்வலான் தன்னையான் றுணைகொடு தமிழர் போற்றிடும் மன்னனா வாழ்ந்திட வைப்ப துன்கடன். 41. தேவியீங் கிருப்பதைத் தெரிந்து போதர ஏவலன் றனையிவண் ஏவல் கூடும்நம் ஆவலை வருபவன் அறிந்து நம்மனை மேவிட மறைவினை விரைவிற் செய்குவாய். ------------------------------------------------------------------------------------------- 38. நோன்மை - வலி. | |
|
|