7. என்றினைய பலசொல்லி என்வாழ்வுன் கையினி்லே ஒன்றியுள திந்நன்றி யொருநாளு மறக்கில்லேன் வென்றியொடு தடையின்றி விரைவாகத் தென்னிலங்கை சென்றினிது மீள்கவெனச் சிலைராமன் விடைதந்தான். 8. பொன்றிடமுப் பெண்கொடுமை புரிந்தசிலை யோனேவ என்றென்றுந் தமிழர்குல மிழிநிலைமை தனையடைய ஒன்றியகோ டரிக்காம்பா யுற்றவிரண் டகவனுமன் தன்றமருக் கழிவுசெயத் தான்விடைகொண் டேநடந்தான். 9. ஒன்றியபல் லிரண்டகரு முடன்றொடர வழிக்கொண்டே குன்றுகளுங் கான்யாறுங் குறுவழியுங் கொடிமுல்லை மன்றலம்பூங் காடுகளும் மருதநில முங்கடந்தே சென்றடைந்தான் சிலபகலிற் றென்னிலங்கை தெளிவில்லான். 10. ஏடாணிக் கொடிநுடங்கு மெழிமாடக் கூடமொடு பீடாருந் திருக்கோயில் பிறங்குமுயர் கொடுமுடியும் கூடாரை யுள்குவிக்குங் கோட்டையெனு மும்மதிலும் தேடாருந் தேடவமை தென்னிலங்கை யதுகண்டான். 11. கண்டதுமற் றவர்களையக் கானிருத்தித் தனித்துவழிக் கொண்டுசெல வழியிலிலைக் குடிலிடையோ ராரியனைக் கண்டுதொழ அவன்வினவக் காரிகைசீதையைச் சிறைசெய் தண்டமிழோன் வரலாறுந் தன்வரவுங் கூறினனால். 12. அதுகேட்ட வாரியனும் அஞ்சாதே மதியனும மதிநுதலு மிலங்கையினில் மனமகிழ்வோ டிருக்கின்றாள் புரியதொரு செய்தியுங்கேள் புகழிலங்கைப் பேரரசை எதிர்நோக்கி இலங்கையர்கோ னிளையோனு முள்ளானாம். 13. அன்னவன்பேர் பீடணனென் றறைவார்க ளயோத்திநகர் மன்னவனாஞ் சிலைராமன் வரவையெதிர் பார்த்தபடி அன்னவனு முள்ளானாம் அவனேவ லானொருவன் என்னிடஞ்சொன் னானீயு மிரவிடைச்சென் றவற்காண்பாய். 14. இப்பகலை யிவ்விடத்தி லேபோக்கி இரவினிலே நப்புலவர் மனம்போல நனிவளத்த பதியுலகில் ஒப்பரிய மதிலிலங்கை யுட்போவாய் எனமுனிவன் அப்பகலை யவ்விடத்தி லவன்கழித்து விடைகொண்டான். | |
|
|