15. விடைகொண்டு மகிழ்ச்சியினால் விம்முற்று நிறையவுளம் நடைகொண்டு தனியாக நஞ்சனைய வஞ்சகனும் மடைகொண்டு நீர்பாயும் வயல்மருத வளநாட்டைக் கடைகொண்டு புறமதிலைக் கடந்துவள நகர்கண்டான். 16. கண்டவனு மகநகரின் காட்சியினைக் கண்டுமகிழ் கொண்டவனும் பிறரையுங் கொள்ளாமல் வழிநடந்து தண்டமிழி னிசைபாடுந் தடந்தெருவைக் கடந்துசென்றி ரண்டகனுந் தனையனவி ரண்டகன்வாழ் மனைகண்டான். 17. கண்டவனுந் தலைவாயிற் காவலரால் வரவுணர்த்திக் கொண்டுமனை யுழிச்சென்று கொடும்பாவி குணமிலியைக் கண்டுதொழ விழிகுணனுங் கடைமகனு மெதிர்தொழிதி ரண்டகனு மிரண்டகனு நடைப்பிணம்போ லெதிர்கொண்டார். 18. எதிர்கொண்ட பின்னவர்க ளிருக்கையினி லினிதமர்ந்து கதிர்கொண்ட பகல்போலக் கலந்துள்ள முறவாடி அதர்கண்ட வகைவினவி அவன்சொல்ல மகிழ்கொண்டு பதர்கொண்ட மணிபோலப் பழிகண்ட பீடணனும். 19. அருகணைய முடியாத அடல்வீர வாலிதனை ஒருகணையா லுயிர்போக்கி யுடன்வருசுக் கிரீவனைநற் பெருகணையின் மீதிருத்திப் பேரரசு தந்துள்ளான் பொருகணைவிற் கையனெனப் புகழ்கின்ற துண்மைகொலோ. 20. எனவனுமன் ஆமுலகி லிணையில்லாச் சிலைவல்லான் எனையுலகு முழுதுறினு மியம்பியசொல் லதுபொய்யான் அனையெனவந் தடைந்தவரை யழியினுங்கை விடுதலிலான் அனையவன்மா மனைதேட அனுப்பினன்கா ணெமதிறைவன். 21. நான்வந்த வழியிலொரு நற்றவனு முயர்மிதிலை ஈன்வந்த சனகன்மகள் ஈங்கிருப்ப தாச்சொன்னான் தேன்வந்த கருங்கூந்தற் சீதைநல மோவென்ன மான்வந்த போதைவிட வாழ்கின்றாள் மகிழ்வாக. 22. என்னவிளை யோயிகலி யிருந்தபெரும் பகைவர்களும் துன்னியரு கணைந்துபுகழ் துணையருளு மெனவேண்டின் இன்னுயிரா யினுமீயு மிருந்தமிழ ரினம்புரக்கும் மன்னனுயர் பெருமையினை வழுத்தல்கொலோ வெனவனுமன். | |
|
|