பக்கம் எண் :


இராவண காவியம் 437

   
         39.   உன்கு லத்தை யுருக்குலைத் தோன்மனைக்
              கென்கு றையிங் கிழைத்தனன் அன்பிலி
              தன்கு லத்தி னிழிவைத் தகவெனும்
              உன்கு ணத்துயர் வுக்குவ மைசொலாய்.

         40.   பேதை யீங்கினிப் பேசுதல் வீணொரு
              சேதி கேளுமித் தென்னிலங் கைத்தமிழ்
              மாதர் முன்னவன் மன்னிப்புக் கேட்குமுன்
              சீதை தன்னைச் சிறைவிடேன் திண்ணமே.

         41.   இன்ன கூறி யிகலரி யேறனான்
              அன்ன வாறே அனுமனைப் பார்த்துநான்
              சொன்ன வாறுபோய்ச் சொல்லியத் தீயரைத்
              துன்னு மாறிங்குச் சொல்கென அன்னனும்,

         42.   மன்ன வாழி மணித்தமிழ் வாழிநீர்
              சொன்ன வாறுபோய்ச் சொல்லித் துருசினில்
              அன்னர் தம்மை யனுப்புவே னீங்கெனாப்
              பின்னு மன்னனைப் பேண விறைவனும்,

         43.   இனவி ரண்டக மென்பது மக்களுள்
              மனமி ருண்டபுன் மாக்கள் செயலதாம்
              புனமி ருண்ட புதருறை பன்றியும்
              இனவி ரண்டகஞ் செய்வ திலையி்லை.

         44.   ஆகை யாலருங் காப்புடன் ஐயநீ
              ஏகி மற்றரை யீங்குறச் செய்திகல்
              போக வாரியப் புன்மையை நீக்கியே
              வாகை சூடி மதிப்புடன் வாழ்குவீர்.

         45.   என்று மன்ன னிசைக்க வனுமனும்
              துன்று காப்புடன் தொன்னகர் நீங்கியே
              சென்று தோழர்க ளோடுசின் னாளினில்
              ஒன்று செல்வக்கிட் கிந்தையை யுற்றனன்.