பக்கம் எண் :


446புலவர் குழந்தை

   
         14.   முத்தெனு முறுவ லரும்பியே யுமது
                   முன்னவர் தமைவர வேற்றுப்
              புத்துண வூட்டித் தமிழகங் கண்ட
                   பொருளெனப் புதுநலங் காட்டி
              ஒத்தினி திருக்க வுடன்பிறந் தவரின்
                   உயரிய வாழ்வினில் வைத்த
              எத்தனை யெமது முன்னவ ரும்மோர்
                   இழிதக வினுக்கிரை யானோர்.

         15.   பொன்னனை யிளம்பொற் கண்ணனைக் கொடையிற்
                   பொருவிலா மாவலி தன்னை
              முன்னிய வென்றி மாந்தரன் றன்னை
                   முத்தமிழ்ச் சூரனை மற்றும்
              என்னின முன்னோ ராகிய வென்றிக்
                   கிலக்கிய மாகவே யமைந்த
              மன்னரை யும்ஓர் வஞ்சனை யாக
                   மடித்தெம தினப்பகை யடுத்தார்.

         16.   அன்றியு முன்றன் றந்தைமுன் னிற்க
                   வாற்றல னாகியே தோற்றேன்
              என்றுமே புகலச் சரியெனப் பாடி
                   யிருக்கையிற் றிடீரென வந்து
              குன்றுயர் தோளான் தென்றமிழ் மீனக்
                   கொடியுடையச் சம்பரன் றன்னைக்
              கொன்றது மும்மோர் எம்மருக் கிழைத்த
                   கொடுமைக்கோ ரெடுத்துக்காட் டன்றோ.

         17.   இன்னமு மும்மோர் கொடுமைக ளனைத்து
                   மிசைத்திட இதுபொழு தன்றே
              என்னினு மும்மோர்க் கெம்மரோர் தீங்கும்
                   இழைத்திடா தாய்தரு மன்பின்
              பன்னலம் பொருந்த அந்தண ராயும்
                   பார்ப்பன ராயுமின் னையுமே
              மன்னவர் மதிப்ப வாழ்வது தமிழர்
                   மாண்பினைக் காட்டுவ தன்றோ.
-------------------------------------------------------------------------------------------
         15. பொன்னன் - இரணியன். பொற்கண்ணன்- இரணியாக்கன். மாந்தரன் - நரகாசுரன். இவர்கள் வரலாற்றினை, சீதை துயருறு படலத்திற் காண்க.