பக்கம் எண் :


இராவண காவியம் 447

   
         18.   ஆருயிர் கொல்லும் வேள்வியைத் தடுப்ப
                   தன்றியு மோரிருப் பதையெம்
              மோரொரு வருமே தடுப்பதில் வேள்விக்
                   குறுதுணை யாகியே தும்பைத்
              தாரணிந் தும்மோர் தமிழகம் போந்து
                   தமிழ்க்கொலை புரிவதே யல்லான்
              ஆரிய நாட்டி லெம்மவர் பாடி
                   யமைத்திகல் விளைத்தது முண்டோ.

         19.   அத்தகை நிலைமை தவிர்ந்துமே யெம்மோ
                   ரமைதியா யிருக்கவெம் மிறைவன்
              மெய்த்திறல் மறவர் தமையடை வாக
                   விரிமலர் விந்தகங் காக்க
              வைத்திட வதனால் உம்மவர் வேள்வி
                   வளர்த்திட முடிகிலா துனைய
              ழைத்திட வந்தெம் மரசியைக் கொன்றே
                   யகன்றுபின் மனையொடு வந்தாய்.

         20.   இங்ஙன நீவிர் தமிழகம் புகுந்த
                   தேதவ றாகிட மேலும்
              எங்குலக் கொழுந்தா மிராவணற் கிளைய
                   இறைவியாய் விந்தகம் புரந்த
              பைங்கிளி தன்னை வன்கொலை புரிந்து
                   படைவலான் றன்னையுங் கொன்று
              செங்கைவே லவற்குச் சினத்தினை மூட்டித்
                   தேவியை யிழக்கவு மானாய்.

         21.   பின்னரும் வாலி தன்னையுங் கொன்று
                   பின்னனைத் துணைவனாக் கொண்டாய்
              என்னினு முன்றன் மனையவள் தனக்கோ
                   ரின்னலுஞ் செய்திடா தன்னாள்
              முன்னிலு மேலாய்த் தன்பிறப் பாக
                   முறைமைகொண் டினிதுவாழ்ந் திருத்தல்
              மின்னிலை வேலான் பெருங்குண மல்லால்
                   வேறென வுரைப்பதற் குளதே.