பக்கம் எண் :


இராவண காவியம் 449

   
          26.   இன்னங் கேட்டி எம்மவர் செய்யும்
                    இருந்தவ வேள்வியை யழித்துத்
               துன்னிடா துங்கள் தாயகம் விட்டுத்
                    துரத்தியும் வருத்தியும் பலவா
               இன்னல்கள் புரிந்தெம் மினப்பகை யாநும்
                    இறைவனை யொழிக்கவே வந்தேன்
               என்னவுஞ் சொல்லிக் கதவடைக் காமல்
                    எதிர்பொர வெளிவரச் செய்வாய்.

          27.   என்றவ னுரைப்ப தென்றென நகைத்தே
                    இறுமவர்க் கறநெறி யென்னாம்
               தன்றவ றுணராத் தகவிலா யுன்றன்
                    தவறதே யுனையடும் போலும்
               இன்றையே வாரும் நாளையேன் றவணை
                    இதுமுடி வெனவுரைத் தெழுந்து
               சென்றனன் வடவன் றம்மவர் களுக்குச்
                    செருக்கொடு மறமுரைத் திருந்தான்.
 
2. ஆய்வுப் படலம்
 
அறுசீர் விருத்தம்
 
          1.    மடிதொழி லகற்றத் தூதாய் மதிமிகு மதிகா யன்போய்க்
               கொடியவ னிசையா னாகக் குறுகிய வாறு கண்டாம்
               படுமுர சதிரு ஞாட்பிற் பகைதெறுந் திறனை யண்ணல்
               நெடியரோ டாய்ந்து கண்ட நெடியதோ ராய்வு காண்பாம்.

          2.    குறித்ததை யுள்ள வாறு கூறினேன் கொள்ளு மாறு
               வெறுத்தனன் பணிவு தன்னை வெகுண்டிதோ ஊரை முற்றி
               ஒறுத்துநுங் குலத்தை வேரோ டொழிப்பனென் றெமது சொல்லை
               மறுத்தனன் சிறியோ னென்று வந்ததி காயன் சொல்ல.

          3.    கனித்தொகை யொடுசெந் தேனுங் கரும்புமிழ் சாறும் பாலு
               மினித்திடும் பிறவு மொவ்வே மென்றுநொந் துருகி வாடும்
               தனித்தமி ழகத்தை முற்றுந் தன்னொரு குடைக்கீ ழோம்பும்
               வினைத்திற மிகுந்த செங்கை வேலவ னதனைக் கேட்டே.
-------------------------------------------------------------------------------------------
          1. ஞாட்பு - போர்.