4. எரிசினங் கனன்று சீறி யின்னனென் றிருக்கை நின்றே அரியெனக் கனைத்தெ ழுந்தே யமைச்சரை விளித்திப் போதே பெரியரைத் தருதிர் நீவீர் பேரமர்த் திறத்தை யாய்ந்து தெரிதரற் கெனவே யன்னார் செப்பினா ரேவல் தம்மால். 5. இதுதெரிந் திலங்கை மூதூர் இருக்குமூ தறிவு மாண்டும் மதியுநன் னெறியுஞ் சால்பும் வாய்மையுந் தூய்மை தானும் பதியர சியலு மான்ற பழக்கமும் பழுத்து மூத்த முதியவர் வந்து தத்தம் முறைமையி னிருந்தா ரம்மா. 6. அன்னவர் தம்மி லான்ற அறிவரா மாடூஉ வொன்றோ தன்னிகர் தானே யான தமிழ்மகள் தானே யென்னப் பன்னல வியல்பும் ஆய்ந்து பழுத்தமூ தாட்டி யாரும் மன்னிய விருப்பிற் றத்தம் மரபினி லிருந்தார் மாதோ. 7. முப்பொழு தாய்ந்து கூறும் மூதறி வமைச்சும் மெச்சுந் தப்பிலா திகலுந் தானைத் தலைவருங் கலைவ லாரும் கப்பிய கிளையு நட்புங் கலைநிலை யென்னத் தொக்கார் இப்பெருங் களரி யார்ப்ப இறைவியோ டிறையும் புக்கான். 8. புக்கவ னிருக்கை யெய்திப் புலமையும் புகழும் வாய்ந்த தக்கசெந் தமிழீர் உங்கள் தமையழைத் தமையென் னென்ப தொக்கலைப் பகைய தின்றி ஒருங்குவன் கொலைசெய் திட்ட அக்கொடும் பாவி தன்னை யடர்த்தற்கென் றறைதல் வேண்டா. 9. பின்னுமப் பாவி யாதும் பிழையிலா வாலி என்னும் மன்னனை மறைந்து கொன்று மற்றவன் தம்பிக் கந்நாட் டின்னர சளித்தப் பொல்லா விரண்டகன் றுணைக்கொண் டன்னான் கன்னியைக் காண வீங்குக் கடத்தினன் அனுமன் றன்னை. 10. பின்னருங் கேட்டிர் அந்தப் பெண்கொலைப் பாவி தன்னை நந்நகர்ப் பெண்டிர் முன்பு நல்லறி வதுபு கட்டி அன்னவன் றேவி தன்னோ டயோத்திநா டனுப்ப வெண்ணி அன்னதை யனுமற் கோதி அனுப்பினே னனுப்பு கென்றே. 11. துன்னியே அனுமன் சொன்ன சொல்லினைக் கேளா னாகி முன்னனை யயலாற் கொன்று முடிபுனைந் தணிகிட் கிந்தை மன்னவ னான அந்த வஞ்சகன் சேனை யோடு நன்னகர்ப் புறத்தின் சோலை நண்ணிவிட் டிருக்கின் றானாம். | |
|
|