12. அயலவ ரெளிய ரென்றே ஆரியப் புல்லர் தம்மைப் பயிலநந் நாட்டில் விட்டே பதடிக ளானோம் அன்னார் மயலுறு தமிழர் தம்மை வழிப்படுத் தேவக் கல்வி பயிலுவித் துளரா மந்தப் பதர்களும் வந்துள் ளாராம். 13. அகத்திடை நினைத்துப் பாரா ஆரிய முனிவ ரெல்லாம் தொகுத்தவப் படைகட் கான சூழ்ச்சிகள் சொலநம் மோடு பகைத்துவந் திருக்கின் றாராம் பைந்தமிழ்க் குரியீர் நீயிர் வகுத்தநன் னெறியிற் செல்ல வரவழைத் தேனீங் கந்தப், 14. பாவிதன் றவற்றை யொப்பிப் பணிந்திடின் மன்னித் தன்னான் தேவியை விடுவ தாகத் திறலதி காயன் றன்னை ஏவினேன் மறுத்தப் பாவ இலங்கையை உடனே முற்றப் போவதா வுரைத்திட் டானாம் பொருந்தவாய்த் துரைப்பீ ரென்ன. 15. மூதறி வாட்டி யோடு மொய்குழல் தன்னைக் கொன்ற ஓதுதற் கரிய பாவி உருவுகாண் டலுந்தீ தாகும் ஆதலா லவனைப் போக்கி அவன்மனை யாட்டி தன்னைப் பாதுகாத் திடல்நன் றென்னப் பகர்ந்தனள் ஒருமூ தாட்டி. 16. ஆமிது தகுதி யென்றார் ஆங்குள மகடூஉ ஆடூஉ நாமினிப் பார்ப்ப தென்னே நற்றமிழ்க் குரிய கோவே தாமரை யோடு தும்பை தரித்துமே பகையை நூறி ஏமுறு வாகை சூட லேயினிச் செய்வ தாகும். 17. அருந்தமி ழகத்தி லின்றோ டாரிய மெனுமுட் பூண்டு மருந்துக்குங் காண லின்றி வகைபட வொழிக்க வேண்டும் இருந்தமுள் மரத்தை வேரோ டிளமையே களையா னாயின் திருந்தவே முதிரின் மற்றோன் செங்கையை வருத்து மன்றோ. 18. நெஞ்சினி லச்ச மின்றி நீள்மதி லிலங்கை வந்த வஞ்சவா ரியப்பே ரீங்கு வழக்கின்றி யொழிக்க வேண்டும் நஞ்சர வதனைப் பாவம் நல்லதென் றில்லில் வைத்துக் கஞ்சியு மூற்றிப் போற்றுங் கயமைபோற் பிறிதொன் றுண்டோ. 19. காரின மிருந்து வாழுங் கடிமதி லிலங்கை வந்த ஆரியப் பூண்டீங் கின்றி யடியுட னொழிக்க வேண்டும் ஓரிலிற் பிடித்த தீயை யொருங்குபோந் தவியா ராயின் ஊரையே தின்றூர் மக்கட் கொதுக்கின்றி யொழிக்கு மன்றோ. ------------------------------------------------------------------------------------------- 16. தாமரை - அடையாளப் பூ. தும்பை - போர்ப் பூ. ஏமுறல் - மகிழ்தல். வாகை - வெற்றிப் பூ. | |
|
|