27. பாலொடு கலந்த நஞ்சப் பாலினின் சுவையைப் போக்கிப் பாலினைக் கெடுத்தப் பாலைப் பருகிடா தகற்றல் போலப் பாலினுஞ் சுவைய தான பழந்தமிழ்ப் பகைமை கொண்ட போலியா ரியரோ டந்தப் பொறையையு மகற்ற வேண்டும். 28. அஞ்சிடா துயிர்மெய் கொன்றூ னருந்தியே வெட்சி சூடி வஞ்சியை யவாவி நம்மூர் வந்துமே யுழிஞை வேய்ந்த வஞ்சரை நூறித் தும்பை மலைந்துமே மிலைந்து வாகை மிஞ்சியே புனைந்து காஞ்சி விழைந்துபா டாண்கொள் வோமே. 29. என்னவே யாங்கி ருந்த யாவரு மொருமித் தோத மன்னவர் மன்ன னந்த மாற்றலர் தம்மை வெல்ல மன்னிய முரச மார்த்து மறவரைத் தொகுத்தி ரென்னத் தன்னிக ரில்லாத் தானைத் தலைவருக் காணை யிட்டான். 30. மடியினில் நெருப்புப் போன்ற வஞ்சரை வடவர் தம்மை நொடியினா னொருவ னேபோய் நூழில தாட்டி மீள்வேன் கொடியணி மாட நீள்முக் கூடலா ரிலங்கை வேந்தே அடியணை யனுப்பு மென்றோ ரரும்படைத் தலைவன் கூற. | பீடணன் | 31. என்றவன் கூற வேயாங் கிருந்தபீ டணனெ ழுந்தே மன்றலந் தாரோ யன்னான் மனைவியை விடுப்பா யாகின் இன்றையே யகன்று செல்வா னில்லையே லிலங்கைச் செல்வம் வென்றவர் தமக்கே யன்னான் வில்வலி சொல்லப் போமோ. 32. கைவல கரனோ டோய்வு கண்டிலா மறவ ரெங்கே மெய்வலி யுடையார்க் கெல்லாம் மேலனாம் வாலி யெங்கே ஐவலி யவன்கை வில்முன் யார்வலி யுடையர் மண்மேல் உய்வதிங் குறுதி யானா லுறவலாற் பிறிதொன் றில்லை. 33. வல்லவ னெவர்க்குந் தப்பா மாற்றல ருயிரை யுண்ணும் வில்லவன் மனைவி தன்னை விடுத்திரேல் நம்பி னோர்க்கு நல்லவன் வெகுளி நீத்து நடக்குவ னயோத்தி நோக்கி அல்லவன் போல யானு மாவதைச் சொன்னே னண்ணா. ------------------------------------------------------------------------------------------- 27. பொறை - சுமை. 28. வெட்சி - ஆனிரை கவர்தல். வஞ்சி - மண் வேண்டி வருதல். உழிஞை - மதில் முற்றல். தும்பை - போர். வாகை - வெற்றி. காஞ்சி - நிலையாமை. பாடாண் - புலவராற் பாடப்படுதல். வஞ்சி - சீதை, சிலேடை. 30. நூழில் ஆட்டல் - கொன்று குவித்தல். | |
|
|