பக்கம் எண் :


இராவண காவியம் 455

   
           38.   உடன்பி றப்பினைச் சினைசி தைத்தகொடி
                     யோனை நல்லனவ னென்றுமே
                மடமை யுற்றவனை யேத்து கின்றனை
                     மான மென்பதுனக் கில்லையோ
                கடமை தப்பியே யடிமை மூதுரை
                     கழறு நீயுமொரு தமிழனா
                உடைமை விற்றவ ரடிமை யுற்றவர்க்
                     குள்ள தோவலுவ லுலகிலே.

           39.   தன்னை யொத்தமி ழன்னை பெற்றதலை
                     மன்ன னாகவரு பொன்னனை
                உன்னை யொத்தவவி ரண்ட கத்தமிழ
                     ருறவு கொண்டுபுது மனையிடை
                மின்னை யொத்தபொய்த் தூண கத்தொரு
                     வெறிபி டித்தவட வாரியன்
                தன்னை வைத்துமே கொலைபு ரிந்தகதை
                     தன்னை நீயறிய வி்ல்லையோ.

           40.   பொன்னன் வீழவவன் றம்பி யானபொற்
                     கண்ண னந்தமிழ் புரக்கையில்
                முன்னன் வீழவஞ் சனைபு ரிந்தகொடு
                     முன்பி லாதவட வாரியர்
                துன்னி டாதுதமிழ் நாடு காத்தவனுந்
                     தோணி யேறிமுந் நீர்க்கடல்
                தன்னி லேகையிற் கொடிய ராயிடைத்
                     தள்ளி மாய்த்தகதை யறியையோ.

           41.   அறமி குத்தகொடை வள்ள லானதமி
                     ழன்னை பெற்றமா வலிதனை
                வறுமை யுற்றனொரு வழியு மில்லையெனை
                     வாழ வைத்தருள்க வென்றுமே
                சிறுமை யுற்றவொரு வடவ னுற்றருகு
                     சென்றி ரப்பகொடை நேர்கையில்
                கறுமை யுற்றகொடி யோனு மையகோ
                     கழுத்த ரிந்ததை யறியையோ.
-------------------------------------------------------------------------------------------
           40. பொன்னன் - இரணியன். இரணியம் - பொன். இவனும், கீழ்வருவோரும் தமிழகத்தின் ஒருபகுதியை யாண்ட தமிழரசர்கள். 40. பொற்கண்ணன் - இரணியாக்கன். 40-45 செய்யுட்களிற் காணும் வரலாற்றினை - சீதை துயருறு படலம் - 51-113 செய்யுட்களிற் காண்க. 41. கறுமை - கெடுமனம்.